Monday, August 16, 2010

Inception – கனவுலகப் பயணங்கள்

படிக்கும் முன்….
இந்த படத்தை பற்றி நன்கு தெரிந்தவர்கள் பின்வரும் விமர்சனம் படிப்பதோடு நிறுத்திக்கொள்ளவும். படம் யாருக்கெல்லாம் புரியவில்லையோ, அவர்கள் விமர்சனத்தின் கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்திகளையும் படிக்கவும்.

விமர்சனம்
நமது கதானாயகனானவன் (Leonardo DiCaprio) தனது சொந்த நாட்டில் தேடப்பட்டுவரும் ஒரு குற்றவாளி (தன் மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக). அவனுக்கு இரண்டு குழந்தைகள் உண்டு.
அவனிடம் உள்ள ஒரு சிறு கருவியால், இன்னொருவரின் கனவுக்குள் நுழைந்து ஒரு சில எண்ணங்களை விதைத்து, தனக்கோ அல்லது வேறு ஒருவர்க்கு சாதகமாக முடிவெடுக்கச் செய்யமுடியும். இந்த திறமையை பயன்படுத்தி பெரிய மனிதர்களுக்கு உதவி செய்து கொடுத்து பின்னர் அவர்கள் மூலமாக தன் நாட்டிற்குள் நுழைய அவன் திட்டம் தீட்டி இருந்தான்.
அப்படிப்பட்ட ஒருவர் (Ken Watanabe) அவனுக்கு கிடைக்கிறார். அவர் இரும்புத் தொழில் செய்ய விரும்புகிறார். ஆனால் ஏற்கனவே அந்த நாட்டில் மிகவும் புகழ் வாய்ந்த ஒரு நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்தின் தலைவர் இறந்து விடுகிறார். அவரின் மகன் அந்த பொறுப்புக்கு வருவார் என அனைவரும் எதிர்ப்பார்கிறார்கள். அந்த வாரிசின் கனவுக்குள் நுழைந்து அவன் மறுபடியும் அந்த தொழிலை மேற்கொள்ளாதவாறு அவன் மனதை மாற்ற வேண்டும் என்பது கதானாயகனுக்கான வேலை.
அவன் அந்த வேலையை சரியாக செய்தானா? தன் நாட்டிற்கு திரும்பிச் சென்றானா? தன் குழந்தைகளுடன் மீண்டும் இணைந்தானா என்பதை வெள்ளித்திரையில் கண்டு தெரிந்து கொள்ளுங்கள்.
1999ல் வெளிவந்த Matrix திரைப்படம் போல் இதிலும் அசத்தலான சண்டை காட்சிகள் அமைந்துள்ளன.

நன்று:
  1. புவிஈர்ப்பை மிஞ்சும் சண்டை காட்சிகள்
  2. அனைத்து கதாபாத்திரங்களின் தன்மையையும் தாம் செய்யும் வேலைகளையும் அவர்கள் மற்றொருவருடன் உரையாடும்போதே நமக்கு புரிய வைத்திருப்பது.
  3. கணினித் தொகுப்புக் காட்சிகள் (Computer Graphics)
  4. அனைவரின் நடிப்பு
  5. சாத்தியமில்லாத அனைத்தையும் நாம் நம்பும்படியாக காண்பித்திருப்பது
  6. கதாபாத்திரங்களின் மனோபாவத்திற்கேற்ப அவர்களின் செய்யும் வேலையும் அமைந்திருப்பது.
நன்றல்லது :
  1. Ken Watanabe – அவரின் ஆங்கில உரையாடலில் ஜப்பானிய மொழியின் ஆதிக்கம் சற்று அதிகமாக உள்ளதால் நம்மால் அவர் பேசுவதை சரியாக தொடர முடியவில்லை.
  2. பனிச்சறுக்கு சண்டை காட்சிகள் – எடிட்டிங்கில் சற்று தடுமாறி இருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.
தவிர்க்காமல் குடும்பத்துடன் பார்க்கவேண்டிய ஒரு திரைப்படம்.

மொத்தத்தில் இதனால் நம் “சூப்பர் ஹீரோக்களுக்கு” தெரிவிப்பது என்னவென்றால்…..
  1. பைக் அல்லது கார் ஒட்டிக்கொண்டே கண்டம் விட்டு கண்டம் தாவுவது.
  2. ஒரு சிறு கத்தியால் வானூர்தியை அறுப்பது
  3. ஒரே ஆளாக ஐம்பது / அறுபது பேரை அடித்து சாய்ப்பது
  4. அருவாளை தூக்கிகொண்டு ஊர் ஊராக கொலை வெறியுடன் அலைவது
  5. கதாநாயகியின் தொப்புளில் ஆபரேஷன் தவிர மற்ற அனைத்தையும் செய்வது
  6. காதலுக்காக கண்டதையும் வெட்டிக்கொல்வது
  7. ஒரே பாடலில் பணக்காரனாவது
மேற்கண்ட அனைத்தையும் விட்டுவிட்டு, இந்த திரைப்படம் போன்று நல்லதொரு படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும்.

படத்தை பார்த்தும் புரியாதவர்களுக்காக……
மற்ற திரைப்படங்களை போலல்லாமல் இத்திரைப்படத்தை பார்ப்பதற்கு ஒருமுகத்தன்மை மிகவும் அத்தியாவசியமாகிறது. உங்களின் ஒரு சிறு கவனச்சிதைவு உங்களை இந்த திரைப்படத்தை ரசிக்க முடியாமல் செய்துவிடும்.
நினைவில் கொள்ளவேண்டிய சில தகவல்கள்…..
நமது கதாநாயகன் ஒரு பிரித்தேடுப்பாளர் (Extractor).
அவரின் வேலை? – ஒரு அடையாளம் காணப்பட்ட மனிதனை (Target)  தன்னை பணியமர்த்தியவரின் (Client) தேவைக்கேற்ப முடிவெடுக்க வைப்பது.
எவ்வாறு ? – தனது நண்பர்கள் மற்றும் ஒரு சிறு கருவியின் உதவியுடன் அந்த மனிதனின் கனவில் ஒரு எண்ணத்தை விதைத்து, அந்த மனிதனை தனக்கு சாதகமாக முடிவெடுக்க வைத்து , பின்னர் அவ்வாறு செயல்பட வைப்பது.
எப்படி சாத்தியம்? – இலக்கானவர் (target), பணியமர்த்தியவர் (Client) மற்றும் கீழ்கண்ட அனைவரும் அந்த கருவியின் மூலமாக கனவில் இணைந்து, திட்டமிட்டபடி செயல்பட்டு மனதை மாற்றுகிறார்கள்.
சிற்பி அல்லது கட்டிடக்கலைஞர் (Architect – Ellen Page) – கனவு நடைபெறும் இடங்களை வடிவமைப்பது.
மருந்தாளுநர் (Chemist – ) – தூக்க மருந்து தயாரிப்பவர். தேவைப்படும் கால அளவிற்கேற்ப மருந்தின் அளவு இவரால் நிர்ணயிக்கப்படும்.
ஆள்மாராட்டக்காரர் (Forger – Tom Hardy) – தேவைக்கேற்ப மற்றொருவரைப்போல் உருவம் மாறும் தன்மையுடையவர் (இது கனவில் மட்டும்).
நினைவில் இருக்கவேண்டிய சில விஷயங்கள்…
  1. Totem – இது ஒருவர் தாம் கனவுலகில் இருக்கிறோமா இல்லையா என்பதை தெரிந்துகொள்ள உதவும் ஒரு சிறிய பொருள். சுற்றுதல் தன்மையுடைய எந்த ஒரு பொருளாகவும் அது இருக்கலாம். அதனை சுற்றிவிட்டபின் சில மணித்துளிகள் கழித்து அது நின்றுவிட்டால், தாம் கனவுலகில் இல்லை என்று தெரிந்து கொள்ளலாம். இதனை நம் கதாநாயகன் வெவ்வேறு இடங்களில் பயன்படுத்துவதை காணலாம்.
  2. Kick – ஒருவரை ஆழ்ந்த நித்திரையில் இருந்து எழுப்புவதற்காக. உதாரணமாக, ஒருவர் தூங்கிக்கொண்டிருக்கும்போது திடீரென கீழே விழ நேர்ந்தால், அவர் தூக்கம் கலைந்து எழுந்து விடுவார். இதனை அவர்கள் அந்த படத்தில் ஒரு காட்சியில் செயல்முறை விளக்கமாக செய்து காட்டுவார்கள். மேலும், அவர்கள் கனவில் செல்லும் வாகனம் கீழே விழும்போது அனைவரின் கனவும் கலைவதும் இதனால்தான்.
  3. ஒருவர் கனவில் இறக்க நேர்ந்தால் அவரது உறக்கம் உடனே தடைப்பட்டுவிடும்.
  4. Limbo – ஒருவர் தன் கனவில் மிகவும் ஆழமாக செல்ல நேர்ந்தால் வரக்கூடியது. இது ஒரு ஆழ்நிலை உறக்கம் என்றும் சொல்லலாம்.
  5. சிற்பியானவர் உலகில் ஏற்கனவே உள்ளவைகளை கொண்டு கனவுலகை வடிவமைத்தால், அவருக்கும் மற்றவர்களுக்கும் தாம் கனவில் இருக்கிறோமா அல்லது நனவில் இருக்கிறோமா என்று வித்தியாசம் காண இயலாது.
  6. ஒருவர் மற்றொருவரின் கனவுக்குள் நுழைந்தால், அவர்களுக்கு அந்த கனவில் உள்ள மற்றவர்களால் தீங்கு நேரக்கூடும்.
இவை அனைத்தும் படம் தொடங்கி முதல் ஐம்பது நிமிடங்களில் நமக்கு இயக்குநரால் சொல்லப்பட்டு விடுகிறது....

No comments:

Post a Comment