Friday, December 17, 2010

விடாக்கண்டனும் கொடாக்கண்டனும்.....


அப்பாடா.....

நாட்டில் பணப்புழக்கம் அதிகமாகிவிட்டது என்று நம் ரிசர்வ் வங்கி கவலைப்பட்டது யாருக்கு கேட்டதோ இல்லையோ, நமது மேலாண்மையான அரசியல்வாதிகளுக்கு நன்றாகவே கேட்டது போலும். 

அதனால்தான் இந்த அதிகமான பணத்தை எவ்வாறு செலவழிப்பது என்று அவர்கள் தாவாங்கட்டையை சொறிந்துகொண்டே யோசித்ததில் கிடைத்தது.... ராஜாவின் ராஜ ஊழல்.

அப்படி  இப்படி என்று இரண்டு கட்சியினரும் அடித்த கூத்தில், அரசிற்கு சுமார் 150 கோடி செலவு. 

"அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா" என்று கவுண்டரின் டயலாக் பேசும் நல்லவர்களே... இந்த பணம் நாம் வரி கட்டிய பணம் என்பதை மறக்கிறீர்கள்.

இன்று பாராளுமன்ற கூட்டுக் குழு கேட்டு கூட்டத்தொடரை நடத்த விடாமல் செய்யும் இதே பிஜேபி, அவர்கள் அரசாளும்போது உண்டான "தெஹெல்கா" விவகாரத்தில், காங்கிரஸ் கேட்டுக்கொண்டபடி பாராளுமன்ற கூட்டுக் குழு அமைக்கமாட்டோம் என்றது அனைவருக்கும் நினைவிருக்கும். வரலாற்று சக்கரம் சுழன்று, இன்று கேட்குமிடத்தில் பிஜேபி, தடுக்குமிடத்தில் காங்கிரஸ். எம்பிக்களின் சம்பள உயர்வு விஷயத்தில் காண்பித்த ஒற்றுமையை இதில் காணவில்லை.

ஆனால் இந்த இரண்டில் என்ன ஒற்றுமை என்று பார்த்தால், வீணாகப் போனது நம்முடைய வரிப்பணம் தான். நமக்கு மட்டும் வரலாற்று சக்கரம் ஏன் சுழல மாட்டேன் என்கிறது என்று தெரியவில்லை.

பல மசோதாக்கள் நிறைவேறாமல் போயிருக்கிறது. யாருக்கும் கவலையில்லை, யாருக்கும் வெட்கமில்லை.

ஒரு  சில விஷயங்கள் என் மண்டைக்கு மட்டும் ஏனோ புரியவில்லை. 
  1. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு விசாரணையை மீண்டும் ஏன் கூட்டுக் குழு விசாரிக்க வேண்டும்? இது நீதிமன்ற அவமதிப்பு ஆகாதா?
  2. இதுவரையில் எத்தனை கூட்டுக் குழு விசாரணை முடிந்திருக்கின்றது?
  3. ஆளுங்கட்சியினர் அமைக்கும் கூட்டுக் குழுவில் எதிர்கட்சியினர் மட்டுமே மாட்டிகொள்வார்கள் என்ற பயமா?
"எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே, நம் நாட்டிலே" என்கின்ற மலைக்கள்ளன் பாடல் நினைவுக்கு வருகிறது.

போட்டியிடுவோர் அனைவரும் கெட்டவர்களாக இருந்தால் யாருக்கு வாக்களிப்பது என்று தானே கேட்கிறீர்கள்?

ஒட்டு போடாதீர்கள்..... "ஓ" போடுங்கள் (49O)!!!!!

மனம் இருந்தால் மார்க்கமுண்டு மக்களே.....

Saturday, December 11, 2010

மலம் தின்னி கழுகுகள்

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கடந்த 1961ஆம் வருடம் "அனைவருக்கும் வீடு" என்கிற நோக்கில் தொடங்கப்பட்டது.

இதன் விதிகள்படி பொதுமக்களுக்கு 85% (குலுக்கல் முறையிலும்) மீதமுள்ள 15% அரசின் விருப்ப உரிமைப்படி ஒதுக்கப்படுகிறது.

தனியாக வசிக்கும் திருமணமாகாத பெண், உடல் ஊனமுற்றவர், ராணுவத்தினர், முதியோர், தியாகிகள், விளையாட்டு வீரர்கள், சமூக சேவகர்கள், அப்பழுக்கற்ற சேவை புரிந்த மாநில அரசு ஊழியர்கள் என்பன போன்ற பதினைந்து பிரிவுகளில் வீடுகள் வழங்கப்பட்டு வந்தன.

மேற்சொன்ன கடைசி இரண்டு பிரிவுகளில்தான் மிகப்பெரிய விதிமீறல்கள் நடந்து வந்துள்ளன.

2001 முதல் ஒதுக்கப்பட்ட மனைகளில் / வீடுகளில், சமூக சேவகர்கள் என்கின்ற பிரிவில் மட்டும் இருநூறு பேருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அடடே நம்மிடையே இவ்வளவு சமூக சேவகர்கள் வாழ்கிறார்களா? என்று நீங்கள் மகிழ்ச்சி அடைய வேண்டாம். அவர்கள் அனைவரும் அரசியல்வாதிகளின் சொந்தங்கள், முதலமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகள், மற்றும் முதல்வரின் மனைவி, துணைவி, மற்றும் இணைவி க்கு தெரிந்தவர்கள்.

நாளொன்றுக்கு பன்னிரண்டு மணி நேரம் சிரமம் பாராமல் உழைத்து, சம்பாதித்து, பத்து மணி நேரம் வரிசையில் நின்று, விண்ணப்பம் வாங்கி பூர்த்தி செய்து, நானூறு ருபாய் பணம் கட்டி, நமக்கும் ஒரு வீடு ஒதுக்கப்படும் என்ற நினைப்போடு காத்திருக்கும் சாதாரண குடிமகனுக்கு கிடைத்தது என்ன? வெறும் ஏமாற்றம் மட்டுமே. அவனது வீடு வாங்கும் கனவு, கனவாக மட்டுமே ஆகிப்போனது ஒரு மிகப்பெரிய கொடுமையான உண்மை.

இந்த காலகட்டத்தில் சரியான மற்றும் நியாயமான விலையில் வீடு வழங்கக்கூடிய ஒரு வாரியமானது இப்பேர்பட்ட ஒரு விதிமீறலை செய்வது என்பது மிகவும் வருந்தத்தக்க ஒரு விஷயம். 

இப்படிப்பட்ட  சமூக சேவகர்களை!!!??? நான் கேட்க விரும்புவது சில கேள்விகள் மட்டுமே....
  1. உங்களுக்கு எல்லாம் என்ன கேடு வந்தது? பொதுமக்களின் பணத்தை ஊழல் என்கின்ற போர்வையில் சூறையாடியது போதாது என்று மக்களுக்கு நியாயமாக சேர வேண்டிய பொருளையும் சூறையாடியது என்ன விதத்தில் நியாயம்?
  2. பணத்திற்கு கொஞ்சம் கூட குறைவில்லாத உங்களுக்கு எங்கள் வயிற்றில் அடிக்கவேண்டிய கட்டாயம் என்ன? எங்கள் பிணங்களை தின்றது போதாது என்று எங்கள் மல***ம் தின்ன வேண்டுமா?
இதற்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய வீட்டு வசதித்துறை அமைச்சர், எமாற்றியவர்களுக்கு ம******** அள்ளி ஊட்டி விட்டுக்கொண்டிருக்கிறார். தானோ அல்லது தன் துறையோ எந்த விதமான தவறும் செய்யவில்லை என்று சொல்லிக்கொண்டு திரிகிறார். சமூக சேவகர்கள் என்கின்ற ஒரு சான்றிதழ் மட்டுமே தேவை, அது யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்று கூறுகிறார். அப்படியானால், எனக்கு என் தம்பியோ அல்லது அண்டை வீட்டுக்காரரோ கூட சான்றிதழ் கொடுக்கலாம் போல இருக்கிறது.

ஆனால் இதனை எதிர்த்து போராடவேண்டிய நம் தமிழ் மக்களோ, நாக்கை தொங்க போட்டுக்கொண்டு இலவசங்களை வாங்கி வீட்டில் வைத்துக்கொண்டு, கண்டும் காணாமல் இருந்து கொண்டிருக்கின்றது.

அதுதானே, தமிழர்கள் ஆயிரமாயிரமாய் கொல்லப்படுவதை அமைதியாக பார்த்துக் கொண்டு இருந்த ஜென்மங்கள் தானே நாம். ரஜினி படத்திற்கு கூடிய கூட்டம் கூட ராஜபக்சே வை விரட்ட வரவில்லையே. இங்கிலாந்தில் மூன்று லட்சம் தமிழர்களால் செய்ய முடிந்ததை ஆறு கோடி தமிழர்களால் ஏன் செய்ய முடியவில்லை?

இந்த ஊழலை வெளிக்கொணர்வோம் என்று ஒரு எதிர்கட்சி கூட்டம் வரும். அவர்களை நம்பி நாம் அவர்களை ஆட்சியில் அமர வைப்போம். அவர்களும் நாளை இதே கூத்தை திரும்ப செய்வார்கள். (அதிமுக கட்சியினருக்கு எத்தனை வீடுகள் ஒதுக்கப்பட்டது என்று கருணாநிதி வெளியிட்ட அறிக்கை ஒரு பெரிய காமெடி). ஒருவர் மாற்றி ஒருவர் சம்பாதித்துக்கொண்டு இருக்கிறார். இதை கேட்கவேண்டிய நாம் அன்றாட தேவைகளைக்  கூட  போராடி பெற்றுக்கொள்ளவேண்டிய நிலைமையில் இருக்கிறோம்.

அன்றே  கொல்லவேண்டிய அரசன் கொல்லப்படவேண்டியவனாக இருக்கிறான்...
நின்று கொல்லவேண்டிய தெய்வம், நின்று கொண்டு மட்டும்தான் இருக்கின்றது.

வாழ்க  ஜனபணநாயகம்.....

பி.கு 
நான் மேலே சொன்ன கேட்ட வார்த்தைகளுக்கு மேல் வேறு ஏதாவது சிறப்பான வார்த்தைகள் இருந்தால், வாசகர்கள் அதனை சேர்த்துக்கொண்டு படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.