Friday, December 17, 2010

விடாக்கண்டனும் கொடாக்கண்டனும்.....


அப்பாடா.....

நாட்டில் பணப்புழக்கம் அதிகமாகிவிட்டது என்று நம் ரிசர்வ் வங்கி கவலைப்பட்டது யாருக்கு கேட்டதோ இல்லையோ, நமது மேலாண்மையான அரசியல்வாதிகளுக்கு நன்றாகவே கேட்டது போலும். 

அதனால்தான் இந்த அதிகமான பணத்தை எவ்வாறு செலவழிப்பது என்று அவர்கள் தாவாங்கட்டையை சொறிந்துகொண்டே யோசித்ததில் கிடைத்தது.... ராஜாவின் ராஜ ஊழல்.

அப்படி  இப்படி என்று இரண்டு கட்சியினரும் அடித்த கூத்தில், அரசிற்கு சுமார் 150 கோடி செலவு. 

"அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா" என்று கவுண்டரின் டயலாக் பேசும் நல்லவர்களே... இந்த பணம் நாம் வரி கட்டிய பணம் என்பதை மறக்கிறீர்கள்.

இன்று பாராளுமன்ற கூட்டுக் குழு கேட்டு கூட்டத்தொடரை நடத்த விடாமல் செய்யும் இதே பிஜேபி, அவர்கள் அரசாளும்போது உண்டான "தெஹெல்கா" விவகாரத்தில், காங்கிரஸ் கேட்டுக்கொண்டபடி பாராளுமன்ற கூட்டுக் குழு அமைக்கமாட்டோம் என்றது அனைவருக்கும் நினைவிருக்கும். வரலாற்று சக்கரம் சுழன்று, இன்று கேட்குமிடத்தில் பிஜேபி, தடுக்குமிடத்தில் காங்கிரஸ். எம்பிக்களின் சம்பள உயர்வு விஷயத்தில் காண்பித்த ஒற்றுமையை இதில் காணவில்லை.

ஆனால் இந்த இரண்டில் என்ன ஒற்றுமை என்று பார்த்தால், வீணாகப் போனது நம்முடைய வரிப்பணம் தான். நமக்கு மட்டும் வரலாற்று சக்கரம் ஏன் சுழல மாட்டேன் என்கிறது என்று தெரியவில்லை.

பல மசோதாக்கள் நிறைவேறாமல் போயிருக்கிறது. யாருக்கும் கவலையில்லை, யாருக்கும் வெட்கமில்லை.

ஒரு  சில விஷயங்கள் என் மண்டைக்கு மட்டும் ஏனோ புரியவில்லை. 
  1. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு விசாரணையை மீண்டும் ஏன் கூட்டுக் குழு விசாரிக்க வேண்டும்? இது நீதிமன்ற அவமதிப்பு ஆகாதா?
  2. இதுவரையில் எத்தனை கூட்டுக் குழு விசாரணை முடிந்திருக்கின்றது?
  3. ஆளுங்கட்சியினர் அமைக்கும் கூட்டுக் குழுவில் எதிர்கட்சியினர் மட்டுமே மாட்டிகொள்வார்கள் என்ற பயமா?
"எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே, நம் நாட்டிலே" என்கின்ற மலைக்கள்ளன் பாடல் நினைவுக்கு வருகிறது.

போட்டியிடுவோர் அனைவரும் கெட்டவர்களாக இருந்தால் யாருக்கு வாக்களிப்பது என்று தானே கேட்கிறீர்கள்?

ஒட்டு போடாதீர்கள்..... "ஓ" போடுங்கள் (49O)!!!!!

மனம் இருந்தால் மார்க்கமுண்டு மக்களே.....

No comments:

Post a Comment