முன்னதாக, எனக்கு இந்த திரைப்படத்தை காண வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்த தம்பி திரு. தினேஷ் பாபு அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
விமர்சனம்:
தமிழ் திரை உலகில் ஒரு மிகப்பெரிய சாதனை....
நன்றி சொல்லப்பட வேண்டியவர்கள்
- அமரர் திரு சுஜாதா அவர்கள் - நீங்கள் இல்லையென்றால் இப்படிப்பட்ட ஒரு திரைக் காவியத்தை நாங்கள் நினைத்துக்கூட பார்த்திருக்க முடியாது. எந்த ஒரு அறிவியல் சித்தாந்தத்தையும் எல்லா மக்களுக்கும் புரிகிற வகையில் உங்களை தவிர வேறு யாராலும் கொடுக்க முடியாது. அதனை இந்த படத்தில் உலகிற்கு நிரூபித்து இருக்கிறீர்கள். உங்கள் தீர்க்க தரிசனம் என்றுமே பொய்த்ததில்லை. அதற்கு இதுவும் ஒரு சான்று.
- இயக்குனர் சங்கர் - நீங்கள் மிகவும் செலவு செய்கிறீர்கள் என்று நான் இன்று வரை நினைத்ததுண்டு. ஆனால் இப்படிப்பட்ட ஒரு கதைக்கு, நீங்கள் நினைத்த உரு வரவேண்டும் என்பதற்காக மெனக்கேட்டது நன்றாக தெரிகிறது. மேலாண்மையின் கோட்பாடுக்கேர்ப்ப சரியான கலைஞர்களை தேர்வு செய்தது உங்களுக்கு கை வந்த கலை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டியிருக்கிறீர்கள். சுமார் பத்து வருடங்களாக இக்கருவை சுமந்து பிரசவித்த உங்கள் வேதனை எனக்கு புரிகிறது. நீங்கள் காத்திருந்தது வீண் போகவில்லை. நீங்கள் நினைத்ததற்கு மேலாக நன்றாகவே வந்திருக்கிறது.
கதை:
நல்ல காரியத்திற்காக உருவாக்கப்பட்ட, மனிதனின் உணர்வுகள் ஊட்டப்பட்ட ஒரு எந்திர மனிதன், தீயவர்களின் உதவியோடு பாதை தவறி சென்றால் ஏற்படும் விளைவுகள் தான் இந்த திரைப்படம்.
நன்று:
- அமரர் சுஜாதாவின் வசனங்கள். அவ்வளவு அருமை. எந்திரனின் பேச்சாகட்டும், அறிவியலை நமக்கு புரிய வைப்பதாகட்டும், அவருக்கு நிகர் அவரேதான். (பெரும்பாலான வசனங்கள் அவரின் "என் இனிய இயந்திரா" மற்றும் "மீண்டும் ஜீனோ" நாவல்களில் இருந்து வந்துள்ளது)
- ரஜினி - அளவான நடிப்பு. தேவையான இடத்தில் நடிக்கிறார். வசன உச்சரிப்பில் கொஞ்சம் தடுமாறினாலும், மற்ற இடங்களில் சமன் படுத்தி விடுகிறார். ஆனாலும் நம்மை ஏங்க வைத்தது, நம் வில்லன் ரஜினி. தமிழ் திரையுலகம் ஒரு நல்ல வில்லனை இழந்து விட்டது. இந்த படத்தில் அறிமுகப் பாடல், பஞ்ச் வசனங்கள் இல்லாதது நிம்மதி தருகிறது.
- கிராபிக்ஸ் காட்சிகள் - நம்மை இருக்கையின் நுனியில் உட்காரச் செய்கிறது. படம் தொடங்கியதிலிருந்து முடியும் வரை நமக்கு ஆச்சரியம் அகலாமல் பார்த்துக்கொண்டது இயக்குனரின் வெற்றி என்றே சொல்லவேண்டும். தமிழ் திரையுலகில் நாம் பார்த்திராத (அல்லது நினைத்துப் பார்த்திராத) காட்சி அமைப்புகள்.
- படத்திற்கு ஏற்ற இசை. ரகுமானின் உழைப்பு இதில் பளிச்சிடுகிறது. இவர் பணி செய்யும் அனைத்து படங்களுக்கும் சமமான உழைப்பை கொடுப்பது அனைவரும் அறிந்ததே.
- சாபு சிரில் அவர்களின் களமைப்பு.
- ஒளிப்பதிவு - மிகவும் அருமை.
- சண்டை காட்சிகள்.
நன்றல்லது:
- நீதிமன்ற காட்சிகள் - நம்பும்படியாக இல்லை.
- திணிக்கப்பட்ட பாடல்கள். வழக்கமான ஷங்கரின் திரைப்படங்களில் உள்ளது போல்.
- ஒரு சில இடங்களில் லாஜிக் மீறல்கள். உதாரணம் - சிட்டி ஐஸ்வர்யாவை கடத்திக்கொண்டு செல்கையில், நூறு பேர்கள் அந்த காரை நோக்கி சுடும்போதும், ஐஸ்வர்யாவுக்கு ஒன்றும் ஆகாதது.
- ஒரு சில இடங்களில் க்ராபிக்ஸ் காட்சிகள் சரியாக இல்லை.
தீர்ப்பு:
இந்திய சினிமாவின் ஒரு மிகப்பெரிய சாதனையை தவறாது கண்டு களியுங்கள். முக்கியமாக சவுண்ட் சிஸ்டம் அருமையாக உள்ள திரையரங்கில் பார்ப்பது மிகவும் சிறந்தது.
கடைசியாக - அனைத்து விழாக்களிலும் அமரர் சுஜாதாவிற்கு தகுந்த மரியாதை செய்யாத, அவரை மறந்துவிட்ட நன்றிகெட்ட கூட்டத்திற்கு (கலாநிதி மாறன், சங்கர் மற்றும் ரஜினி) எனது கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

No comments:
Post a Comment