Thursday, August 26, 2010

காப்பியடித்த நீதிபதிகள் - ஒரு வெட்கக்கேடு

இன்று காலை ஆந்திராவிலுள்ள வாரங்கல்லில் ஒரு கல்லூரியில் "காப்பி" அடித்ததற்காக ஐந்து பேர் மீது சட்டம் பாய்ந்துள்ளது. 

இதெல்லாம் ஒரு செய்தியா? என்று கேட்பவர்களுக்கு ஒரு செய்தி....

"காப்பி" அடித்து மாட்டிக்கொண்டவர்கள் அனைவரும் பள்ளி அல்லது கல்லூரி மாணவர்களா? இல்லை இல்லை... 

நம் நாட்டில், நீதியை நிலைநாட்டுவார்கள் என்று நாம் நம்பி, கடைசி முயற்சியாக நாம் போகும் நீதிமன்றத்தில், தீர்ப்பளிக்கும் நிலையில் உள்ள "நீதிமான்கள்!!!???" தான் அவர்கள் (மாவட்ட நீதிமன்றங்களின் நீதிபதிகள்)

முதலாண்டு  LLM பரீட்சையில், அப்பட்டமாக புத்தகம் மற்றும் அச்சடிக்கப்பட்ட காகிதங்களில் விடைகளை எழுதிக்கொணற்ந்து, பின்பு பார்த்து பார்த்து எழுதும்போது பறக்கும் படையினர் காமிரா சகிதம் வந்து "கையும், காப்பியுமாக" பிடித்தனர். அனைவரின் கீழ்தரமும் வெளிச்சத்திற்கு வந்தது. முழுநேர செய்தி அலைவரிசைகளில் இதை அப்படியே காண்பித்தார்கள்.

இதில் மாட்டிக்கொண்ட ஒருவர் தான் காப்பியடிக்கவேயில்லை என்று சத்தியம் செய்தார் (அவர்தான் காமிராவில் முதலில் பிடிபட்டவர் என்பது நமக்கே தெரிகிறது). இதில் மாட்டிக்கொண்ட அனைவரும், அப்படி எதுவுமே நடந்திராதது போல் சிரித்துக்கொண்டே இருந்ததுதான் வெட்கக்கேடான ஒருஉண்மை.

இந்த பரீட்சையில் தேறினால், சம்பள மற்றும் பதவி உயர்வு கிட்டும் என்பதற்காக, தம்மீது நம்பிக்கை வைக்காமல், படித்துதான் பரீட்சையில் தேரவேண்டும் என்பதை மறந்து, என்ன வேண்டுமானாலும் செய்து தேறலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கின்றனர்.

யார் கொடுத்தார்கள் இவ்வளவு தைரியம்? என்ன ஆனாலும் பரவாயில்லை, நம்மை யாரும் அசைக்க முடியாது என்ற தைரியமா? அல்லது, எப்படியும் நீதிமன்றத்திற்கு தானே வந்தாக வேண்டும், அங்கே நம்முடைய சக்தியை வைத்து தப்பிவிடலாம் என்கின்ற எண்ணமா?

ஒரு பானை சொத்துக்கு ஒரு சோறு பதம் என்று இதை வைத்து மற்ற அனைவரும் இப்படித்தான் என்று முடிவேடுக்கலாமா? 

முடியாது...

ஏன்?

மனிதருக்கு இது பொருந்தாது. அதனால் மற்றவர் அனைவரையும் விட்டு விடுவோம்.

யார் மீது தவறு? இவர்களையெல்லாம் இந்த ஒரு மேன்மையான நாற்காலியில் உட்கார வைத்தது யார்? 

திறமை வேண்டாம். இத்தனை வருடங்கள் ஒரு பதவியில் இருந்தால் மட்டுமே போதும், அனைவருக்கும் பதவி உயர்வு என்று சொல்லும் நமது அரசு சட்ட திட்டங்களா?..... இருக்கலாம்!

ஒரு  நாளைக்கு சுமார் பதினெட்டு மணி நேரம் உழைத்து, திறமையை வெளிக்காட்டி, சில நூறு ருபாய் சம்பள உயர்வு பெறுகின்றனர் நம்மிடையே இருக்கும் தனியார் ஊழியர்கள். ஆனால் இங்கே? நோகாமல், படிக்காமல்,ஏமாற்ற மட்டுமே தெரிந்தால் போதும். முன்னேறலாம் என்று நம்புகின்றனர்.

ஒரு நாளைக்கு சுமார் ஐந்து மணி நேரம் மட்டுமே உழைக்கும் இவர்களுக்கு மீதமுள்ள நேரத்தில் படித்தால் என்ன கேடு வந்துவிடுகிறது என்று தெரியவில்லை.

"தெரிந்தது  கையளவு, தெரியாதது கடலளவு" என்பதுபோல, இன்னும் எத்தனை பேர் உள்ளனரோ?

பிடிபடும் வரை அனைவரும் நல்லவர்கள் தானே...

இவர்கள் சற்றும் திருந்தப்போவது இல்லை. இன்னும் சில நாட்கள் கழித்து, "எப்படியாவது" மீண்டு(ம்) பதவியில் அமர்வார்கள். தீர்ப்பு சொல்வார்கள். இவர்களே மற்றவரை திருடர்கள் என்பார்கள். சொல்ல முடியாது, இன்னுமொரு காப்பியடித்த வழக்கிற்கு இவர்களே நீதிபதிகளாகக் கூட ஆகலாம். பள்ளித் தேர்வில் தவறினால் தற்கொலை செய்துகொள்ளும்  மானமுள்ள  மாணவர்கள் வாழும் இந்த "தேசத்தில்" இதுவும் நடக்கும்.

Tuesday, August 24, 2010

நான் மகான் அல்ல - திரை விமர்சனம்


மிகுந்த நாட்கள் கழித்து ஒரு நல்ல திரைப்படம் பார்த்த திருப்தி.

கதை:
தனது தாய், தந்தை (ஜெயபிரகாஷ்) மற்றும் தங்கை (ப்ரியா), இவர்களோடு வாழும் ஒரு நடுத்தர வர்க்கத்து கவலையில்லா மனிதன் ஜீவா (கார்த்திக்). நம் வழக்கமான கதாநாயகன் போல் வேலையில்லாமல் இருக்கிறார். நண்பியின் திருமண விழாவில் கலந்துகொள்ளும் இவருக்கும் ப்ரியாவிற்க்கும்  (காஜல் அகர்வால்) கண்டதும் காதல் பூக்கிறது. இருவரும் காதலிக்க தொடங்குகிறார்கள். காதலியின் வேண்டுகோளின் பேரில் வேலைக்கு சேருகிறார் ஜீவா. இதற்கிடையில், கால் டாக்சி ஓட்டுனராக இருக்கும் அவர் தந்தை, ஒரு கொலைக்கு சாட்சி சொல்லப் போக, அவரை அந்த கொலை கும்பல் கொன்று விடுகிறது. அந்த கொலைக் கும்பலை ஜீவா தேடி சென்று பழிவாங்குகிறார்.

நன்று:
  1. இயக்கம் - குறை சொல்ல முடியாத ஒரு நல்ல படைப்பு. இயக்குனர் சுசீந்தரனுக்கு பாராட்டுக்கள். நாம் எதிர்பார்க்கும் காட்சிகள் எங்கேயும் வரவில்லை. 
  2. காஜல் அகர்வால் - சில இடங்களிலேயே வந்தாலும் நிறைவாகச் செய்திருக்கிறார். வழக்கமான கதாநாயகி போல் ஆடிப்பாடிவிட்டு செல்லாமல், காதலன் வேலைக்குச் செல்ல காரணமாக இருக்கிறார். நன்றாக நடிக்கிறார். முக்கியமாக, ஒரு பாடல் காட்சியில், தந்தையுடன் செல்லும்போது காதலன் திடீரென வர, அவர் அவர் முகத்தில் தோன்றும் மாறுதல்கள், மிகவும் அருமை. கண்களால் கவி பாடுகிறார். நல்ல தேர்வு.
  3. கார்த்தி - வேலையில்லாமல் சுற்றுவதாகட்டும், காதலிப்பதாகட்டும், தந்தை மறைவிற்கு வருந்துவதாகட்டும், சண்டை காட்சிகளாகட்டும், அனைத்திலும் அருமை. சில இடங்களில் (பெண் கேட்க செல்லும் போது) மௌன ராகம் கார்த்திக் நமக்கு நினைவுக்கு வருகிறார்.
  4. யுவனின் இசை - தாளம் போட வைக்கும் பாடல்கள். "இறகை போலே" பாடல் நம் உதட்டில் ஒட்டிகொள்கிறது. பின்னணி இசையும் அருமையாகச் செய்திருக்கிறார். பாராட்டுக்கள். 
  5. ஜீவாவின் நண்பன் (சூரி), ஜீவாவின் தந்தை, இவர்கள் இருவரும் சரியான தேர்வு. நன்றாக நடிக்கிறார்கள். சூரிக்கு நன்றாக காமெடி வருகிறது. 
  6. அனைத்து கதாபாத்திரங்களும் கதைக்கு எதோ ஒரு வகையில் உதவுகிறார்கள். அந்த விஷயத்தில் சரியான பாத்திரதேர்வு. அநாவசியமான எந்த ஒரு கதாபாத்திரமும் சேர்க்கப்படவில்லை.
  7. வழக்கமான  சண்டை காட்சிகள் போல அல்லாமல், நாம் நிஜ வாழ்வில் காண்பதுபோல் உள்ளது அருமை. 
  8. ஒளிப்பதிவு - சென்னை அழகாக தெரிகிறது.
  9. அந்த இளைஞர்கள் ஏன் கொலைகளை செய்கிறார்கள் என்று காரணம் சொல்லாதது ஒரு சிறந்த நிவாரணம்.
  10. வசனம் - தேவையான இடத்தினில் மட்டும். அநாவசியமான வசனங்கள் இல்லை.
நன்றல்லது:
  1. புதிய நடிகர்கள் சிலர் அவ்வப்போது காமிரா பக்கம் பார்ப்பதை தவிர்த்திருக்கலாம். உதாரணமாக, ஜீவா அந்த ஸ்கெட்ச் போட்டவனை துரத்தும்போது, அவர் ஒரு இடத்தில் செய்வதறியாது காமெராவை பார்ப்பார். அதனை தவிர்த்திருக்கலாம்.
  2. ஒரு பெரிய ரவுடி சின்ன பசங்களிடம் தோற்பது நம்பமுடியவில்லை.
  3. ஜீவா அந்த ரௌடியிடம் நட்பாகும் காட்சி சற்று மிகைப்படுத்தப்பட்டது போல் உள்ளது.
  4. பின்பாதியில் சற்றே ரத்த நெடி தூக்கலாக உள்ளதுபோல் இருக்கிறது.
தீர்ப்பு:
கதாநாயகன் சூளுரைக்கவும், பஞ்ச் டயலாக் பேசவும் நிறைய வாய்ப்புகள் இருந்தாலும் அதனை தவிர்த்து, கதையை நன்றாக நடத்திச் சென்ற இயக்குநருக்காக இந்த திரைப்படத்தினை கண்டு களிக்கலாம்.

திரைப்படத்தை காணும்போதும், கண்டபின் வெளியே வந்த பின்னும் அந்த திரைப்படத்தின் பாதிப்பு நம்மை  விட்டு அகலாதது இயக்குனரின் மாபெரும் வெற்றி என்றே சொல்லவேண்டும். 

பின்குறிப்பு: 
தயவுசெய்து குழந்தைகளை இந்த திரைப்படம் பார்க்க அழைத்துப் போவதை தவிர்க்கவும்.

Sunday, August 22, 2010

இனிது இனிது - விமர்சனம்


நான்கு வருடங்கள்....
எட்டு கதாபாத்திரங்கள்...
நான்கு காதல்கள்.... அதில் இரண்டு வெற்றிபெற, ஒன்று தோல்வியுற மற்றொன்று விடை தெரியாமல் தொடருகிறது....

பிரகாஷ்ராஜின் டூயட் மூவீஸ் பிரசவித்த மற்றுமொரு நற்படைப்பு. வாழ்த்துக்கள் பிரகாஷ்ராஜ்... மீண்டும் ஒருமுறை....

கதைச்சுருக்கம்:

சித்து (ஆதித்), டைசன் (நாராயணன்), விமல் (விமல்), சங்கர் (ஷ்ரவன்), மது (ரேஷ்மி), சங்கீதா (ஜியா உமர்), அப்பு (பெனாஸ்), ஷ்ரவந்தி (சோனியா) மற்றும் சரண் ஆகியோர்கல்லூரி நண்பர்கள். அவர்களுக்குள் நான்கு வருடங்களில் நடக்கும் காதல், மோதல், நட்பு, தியாகம் இவைகளின் கலவை தான் இந்த திரைப்படம். 

யார் யாருக்கு ஜோடி, அவர்கள் அனைவரும் சேர்ந்தார்களா அல்லது பிரிந்தார்களா? என்பதை வழக்கம்போல் வெள்ளித்திரையில் கண்டு களிக்க. 

நன்று:
  1. சோனியா தவிர மற்றவர்கள் அனைவரும் புதுமுகங்கள். நடிப்பை நன்றாக வெளிப்படுத்துகிறார்கள். ஒரு கல்லூரியின் உள்ளே நுழைந்த பிரமிப்பு ஏற்படுகிறது. இதில் கவனிக்கப்படவேண்டிய இருவர்... டைசன் மற்றும் விமல். முன்னவர்க்கு நடிப்பு நன்றாக வருகிறது. பின்னவருக்கு காமெடி நன்றாக வருகிறது. இருவரையும் திரைப்படம் பார்த்த அனைவருக்கும் மிகவும் பிடித்திருக்கிறது. இந்த இருவரில் போட்டியில் வெற்றி பெறுவது டைசன் என்பது அரங்கில் கிடைத்த சான்றிதழ்.
  2. ஒளிப்பதிவு. மிகவும் அருமை. கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. கே.வி. குகனுக்கு பாராட்டுக்கள். அதில் முக்கியமாக கேரளாவில் உள்ள அழகு அனைத்தையும் அள்ளிக்கொண்டு வந்து நமக்கு சமர்ப்பிக்கிறார்.
  3. விரசமில்லாத் திரைக்கதை. வழக்கமாக கல்லூரி என்றாலே பலவற்றையும் காண்பிக்கும் இக்காலத்தில், இது ஒரு தைரியமான நன்முயற்சி. (பிரகாஷ்ராஜ் படம் என்றாலே இவை இருக்காது என்பது அனைவரும் அறிந்ததே).
  4. மது மற்றும் ஷ்ரவந்தி நம் மனதில் நிற்கிறார்கள்.நாம் அன்றாடம் காணும் கதாபாத்திரங்கள் போல் இருப்பது படத்திற்கு கூடுதல் பலம். இந்த இருவரில் வெற்றி பெறுவது ஷ்ரவந்தி. நன்றாக நடிக்கிறார், சிரிக்கிறார், உருகுகிறார். அப்புவாக வரும் பெனாஸ் கவனிக்கப்படவேண்டியவர். கான்டக்ட் லென்ஸ் பற்றி மதுவிடம் விசாரிக்கும் காட்சியில் நம்மையும் கண் கலங்க வைக்கிறார்.
  5. நேர்த்தியான மற்றும் சினிமாத்தனம் இல்லாத திரைக்கதை அமைப்பு.  கதாசிரியர்  (வழக்கமான கல்லூரி திரைப்படங்களை போல் அல்லாமல்) நமக்கு எந்த பாடமும் கற்பிக்க முற்படவில்லை என்பதே மிக ஆறுதலான விஷயம். எந்த விதமான திடீர் திருப்பங்கள் ஏதும் இல்லாமல் காலத்தோடு கதை நகர்வது முகவும் ஆறுதல்.
  6. நண்பர்களுக்குள் தியாகம், நட்பு, கோபம் மற்றும் தத்தம் பெற்றோரிடம் உள்ள பாசம் அனைத்தும் சினிமாத்தனம் இல்லாமல் சொல்லப்பட்டு இருக்கிறது.
  7. வசனங்கள்  - மிகவும் அருமை. அன்றாடம் நாம் பேசுவது போல் உள்ளது. படத்திற்கு மிகவும் உயிரூட்டுகின்றது. 
  8. வழக்கமான  கதாநாயகிகள் போலல்லாமல், அனைவருக்கும் நடிக்க சந்தர்ப்பம் கொடுத்து இருக்கிறார்கள். அவர்களும் அதனை சரிவர பயன்படுத்தி இருக்கிறார்கள்.
  9. காதலர்கள் தத்தம் காதலை தாங்கள் உணர்ந்துகொள்ளும் இடம் மிகவும் அருமை.
நன்றல்லது:
  1. கதாநாயகன் சற்றே உயரம் குறைந்த "வினய்" போல் இருக்கிறார். பாத்திரப்படைப்பு நன்றாக இருந்தாலும், ஒரு துள்ளல் அவரிடம் இல்லாதது சற்று அந்நியமாக தோன்றுகிறது. 
  2. ஒரு பாடல் தவிர மற்ற அனைத்தும் மனதில் நிற்க மறுக்கின்றன. தெலுங்கு பாடலில் தமிழ் வரிகள் அழுத்தி திணிக்கப்பட்டது போல் ஒரு அந்நியத்தன்மை தோன்றுகிறது. சில பாடல்கள் கதையின் ஓட்டத்திற்கு அல்லாமல் வந்து போகின்றன.
  3. காதலர்களுக்குள் வரும் ஊடல் காட்சிகள் "குஷி" திரைப்படத்தை நினைவூட்டுகின்றன.
  4. "பால்பாண்டி" கதாபாத்திரம், திணிக்கப்பட்ட சினிமாத்தனம். இதே போன்று ஒரு கதாபாத்திரத்தை தெலுங்கு படைப்பில் மிகவும் அழகாக கையாண்டு இருக்கிறார்கள். தமிழில் அதனை தவறவிட்டது, இத்திரைப்படத்திற்கு எதிர்மறை விளைவைத் தருகிறது.
  5. பின்பாதி சற்று இழுவையாக இருப்பதை தவிர்த்திருக்கலாம்.
தீர்ப்பு:
ஆங்காங்கே சில குறைகள் தென்பட்டாலும்...

நல்ல கதையம்சம், போலித்தனம் இல்லாத உயிரோட்டமான பாத்திரப்படைப்பு, சிறந்த ஒளிப்பதிவு, புதுமுகங்கள் தரும் புத்துணர்வு என்பன போன்ற பல நிறைகளுக்காக குடும்பத்துடன் எத்தனை முறை வேண்டுமானாலும் கண்டு களிக்கலாம். 

கதையை தவிர மற்ற அனைத்தையும் நம்பும் இச் சினிமா உலகில், இன்று வரை துளியும் மாறாமல் நல்ல திரைப்படங்களை தரும் பிரகாஷ்ராஜ் போன்ற தயாரிப்பளர்களை வாழ்த்தி, வரவேற்று ஊக்குவிப்போம்.

Thursday, August 19, 2010

பீனிக்ஸ் பறவை - நாம் கற்க வேண்டியது...



படிக்கும்  முன் : இந்த கட்டுரை ஒரு நிர்வாகயியல்  பார்வையில் மட்டுமே படிக்குமாறு வாசகர்களை வேண்டுகிறேன். எந்த ஒரு கட்சிக்கோ அல்லது தலைவருக்கோ  மதிப்பு கூட்டும் பொருட்டு எழுதப்படவில்லை என்பதனை தெரிவித்துக்கொள்கிறேன்.
 ------------

இந்த முறை மட்டுமல்லாது ஒவ்வொரு முறையும் உலகிற்கு உணர்த்தியிருக்கிறார், ஜெயலலிதா ... தான் ஒரு பீனிக்ஸ் பறவை என்று.

பரந்த திறலாரைப் பாசி மேல் இட்டு,
கரந்து மறைக்கலும் ஆமோ? - நிரந்து எழுந்து
வேயின் திரண்ட தோள், வேற்கண்ணாய்! விண் இயங்கும்
ஞாயிற்றைக் கைம் மறைப்பார் இல்.
 

என்ற பழமொழி நானூறு செய்யுளுக்கேற்ற உதாரணமாக இதனை சொல்லலாம்.

எத்தனை எத்தனை விமர்சனங்கள்... கட்சியை கவனிக்காமல் கொடநாட்டில் ஓய்வெடுக்கிறார், எந்த ஒரு போராட்டத்திலும் கலந்து கொள்ளாமல் தப்பிக்கிறார், யாரையும் சந்திக்க மாட்டேங்கிறார், இப்படி செய்தால் அதிமுக காணாமல் போய்விடும் என்று ஆளும் கட்சியினர் அடித்த மணியை அனைவரும் நம்பிக்கொண்டிருக்க, இரண்டே இரண்டு கூட்டங்கள் நடத்தி ஆளும் கட்சியினரை, ஆழ்ந்த நித்திரையில் இருந்து  அலாரம் வைத்து எழுப்பி இருக்கிறார் (இவங்க character ஐ புரிஞ்சிக்க மாட்டேங்கிறாங்களே!!!). 

திடீரென தூக்கத்தில் இருந்து எழுந்ததால் என்ன செய்வதென்றே புரியாமல் "உலக வரலாற்றில் முதன்முறையாக", எதிர்கட்சியை எதிர்த்து ஆளுங்கட்சி போராட்டம் நடத்தி வரலாற்றில் இடம் பிடித்திருக்கின்றனர். சொந்தமாக எதுவும் செய்ய தெரியாததால் அம்மையார் கூட்டம் நடத்திய இடங்களில் தாமும் சென்று கூட்டங்களை நடத்துகிறார்கள். ஜெயலலிதா நடத்திய கூட்டங்களில் கூடிய மக்கள் வெள்ளத்தை பார்த்த பீதியில், நமது  கலைஞர் அவர்கள், அவருக்கு என்ன சுலபமாக வருமோ அதை செய்கிறார். வேறென்ன? இலவசங்கள் தான்.... 

யார்தான் இவரை பற்றி நெகடிவ் விமரிசனங்கள் பேசவில்லை? 

நக்கீரன் - ஆளுங்கட்சியின் அருளோடு ஒரு கணக்கெடுப்பு நடத்தி, ஒவ்வொரு வாரமும் பக்கத்திற்கு பக்கம் திமுக தான் அடுத்து ஆட்சியை பிடிக்கும் என்று கூவி வருகிறது. நெற்றிக்கண் தூங்குகிறது போலும்....

தொலைக்காட்சி அலைவரிசைகள் -  சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளின் பொழுதுபோக்கு மற்றும் செய்தி அலைவரிசைகளின் ஓயாத கூப்பாடுகள்... (ம்ஹூம், என்ன முக்கினாலும் நடக்காது)

வழக்குகள் - எத்தனை எத்தனை? அவர் தவறு செய்தாரா இல்லையா என்பதை பற்றி நான் வாதாட வரவில்லை. ஆனால் இவை அனைத்தையும் சமாளிக்கும் திறனைத்தான் நான் வியக்கிறேன்.


எப்படி சாத்தியமானது இந்தநல்லதொரு தொடக்கம்?
  1. ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடியிருந்தது - ஆளுங்கட்சியின் அவலங்களை இயன்றவரையில் ஒருமுகப்படுத்தி, கடைசியில் அவற்றை மிகப்பெரிய பாணங்களாகத் தொடுத்தது.
  2. ஊரே ஒன்று சேர்ந்து உன்னால் முடியாது என்று கூறினாலும், காது கேட்காத தவளை கிணற்றின் மீது ஏறி வந்த கதை போல -  நான்கு வருடங்களாக எல்லோராலும் , இனி அதிமுக விற்கு எதிர்காலமே இல்லை என்று கூறி வந்தாலும், அதனை பொருட்படுத்தாது, எதிர்நீச்சல் போட்டு சாதித்து காட்டியது. 
  3. தொலைநோக்கு சிந்தனை - இலவசங்களை  கொடுத்து சில காலங்களுக்கு ஏமாற்றலாம் ஆனால் அது எக்காலத்திற்கும் சரியாக வராது என்று நன்றாக தெரிந்து வைத்திருந்தது. 
  4. எவையெல்லாம்  திமுக விற்கு பலமாக இருந்தனவோ, அவை அனைத்தையும் காலம் பலவீனமாக மாற்றிக் காட்டும் என்று முன்னரே அறிந்திருந்தது.
  5. பணத்தின் மீது நம்பிக்கை வைத்த அரசியல் சாணக்கியர்களின் மத்தியில், தன் திறமை மீதும், மக்கள் மீதும் மட்டுமே நம்பிக்கை வைத்தது.
  6. ஒரு  தலைவனுக்குண்டான அனைத்து தகுதிகளையும் மெருகேற்றிக் கொண்டது.
உலகத்தின் எந்த ஒரு சுய முன்னேற்ற நூல்களை எடுத்துக்கொண்டாலும், அவை, மேற்கூறியது போன்ற இந்த தகுதிகளைத்தான் முன்னிறுத்திக் கூறுகின்றன.

அம்மையாருக்கு ஒரு வேண்டுகோள் : 
  1. மக்களுக்கு உங்கள் மேல் அபார நம்பிக்கை உள்ளது. அதனை சரியான விதத்தில் பயன்படுத்த வேண்டும். 
  2. முன்னர் நடந்தது போல் அல்லாமல் இந்த முறையாவது மக்கள் விரும்பும்படி ஆட்சி செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். யாரையும் பழி வாங்கும் நோக்கமில்லாமல், மக்கள் நலனை மட்டுமே மனதில் கொள்ளவேண்டும்.  
  3. அதிமுக வின் ஊழல் அடிவருடிகளை தங்களிடம்  அண்டவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
  4. மிகவும் முக்கியமாக தங்கள் சொந்தங்களை (அல்லது தோழியின் சொந்தங்களை) கட்சியில் இருந்து தள்ளியே வைக்கவேண்டும்.

Monday, August 16, 2010

சினிமா விமர்சனம் - காதல் சொல்ல வந்தேன்...


கதை
நமது கதாநாயகன் "நானு பிரபு" (Balaji) வேதியியல் முதலாம் ஆண்டு மாணவன். அவன் படிக்கும் அதே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவியான "சந்தியா"வை (Meghna) பார்த்த முதற்கொண்டே காதலிக்கிறார். அவனின் குணங்களை கண்டு சந்தியாவிற்கும் அவனை பிடிக்கிறது. இருவரும் பழகத் தொடங்குகிறார்கள். அவன் தன் காதலை அவளிடம் சொல்லும் முன்னரே, அவள், அவனிடம் ஒரு சகோதர நேசத்துடன் மட்டும் தான் பழகுவதாக சொல்லிவிடுகிறாள். அவன் அதை எற்றுக்கொண்டானா? இருவரும் இணைந்தார்களா? என்பதை வெள்ளித்திரையில் கண்டு தெரிந்துகொள்க....

நன்று
  1. நம்  கதாநாயகனான பாலாஜி. நன்றாக நடிக்க வருகிறது இவருக்கு. தமிழ் திரைப்பட உலகிற்கு இன்னுமொரு திறமையான வரவு.
  2. கதாநாயகி - சரியான தேர்வு. பக்கத்து வீட்டு அக்க போல் இருக்கிறார். மற்ற கதாநாயகிகளைப்போல் சும்மா வந்து செல்லாமல், தனது நடிப்பால் கதையின் உயிரோட்டத்திற்கு நன்றாக உதவுகிறார்.
  3. யுவனின் இசை - நம்மை தாலாட்டுகிறது. அனைத்து பாடல்களும் அருமை. மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது.
  4. பாடல்கள் படமாக்கப்பட்ட விதம் - நன்றாக இருக்கிறது. 
  5. கதாநாயகனின் தோழனாக வரும் அந்த பொடியனுக்கு (Sabesh Bobby) நன்றாக காமெடி வருகிறது. பல இடங்களில் நம்ம சிரிக்க வைத்தாலும் சில இடங்களில் நம்மை தமது நடிப்பால் அழவும் வைக்கிறார்.
  6. ஒளிப்பதிவு (Rana) - அருமை. திருச்சி, இவர் காமிரா வழியே மிகவும் அழகாகத் தெரிகிறது. 
நன்றல்லது
  1. நமது கதாநாயகன, முகபாவங்களிலும், நடிப்பிர்க்கேற்ற உடலசைவிலும் இன்னும் மெருகேற வேண்டும்.
  2. திணிக்கப்பட்ட  பாடல் (சாமி வருகுது). முழுவதும் ஒரு சொல்லவொண்ணா செயற்கைத்தனம்.
  3. எடிட்டிங் - முகவும் சொதப்பி இருக்கிறார்கள். பல இடங்களில் கட்சிகள் முடிந்தவுடன் அவற்றை வெட்டாமல் சில வினாடிகள் நீண்டு இருப்பது எரிச்சலை தருகிறது.
  4. நீளமான பின்பாதி.
  5. முன்னர் வந்த திரைப்படங்களை நினைவூட்டும் சில காட்சிகள்.
  6. சில இடங்களில் ஏன் என்றே தெரியாமல் காட்சிகளை வைத்து இருப்பது. உதாரணமாக அந்த லாட்ஜ் காட்சி. கதாநாயகனுக்கு புத்தி வருவதற்கு இப்படியெல்லாமா செய்வது?. சினிமாத்தனம்..
  7. கடைசிக்  காட்சியில் சினிமாத்தனம் சற்றே தூக்கலாக இருப்பதால் அதனால் நம் மனதில் எந்த விதமான உணர்ச்சியும் ஏற்படவில்லை.
தீர்ப்பு:

நாம் தினமும் பார்க்கும் சக மனிதர்களைப் போல் கதாபாத்திரங்கள், புதுமுகங்களின் நடிப்பு, யாரையும் புண்படுத்தாமல் வயிற்றை மட்டும் புண்படுத்தும் காமெடி காட்சிகள், சண்டை காட்சிகளையும் கவர்ச்சியையும் நம் இயக்குனர் நம்பாது கதையை மட்டுமே நம்பியது, இந்த படத்திற்கு நல்லதொரு பெயரை பெற்று தருகிறது. 

இப்படிப்பட்ட முயற்சிகளுக்கு ஒரு உந்துதல் தருவதற்காகவும், நல்ல கதையமைப்பிற்காகவும் இந்த திரைப்படத்தை குடும்பத்துடன் சென்று கண்டு களிக்கலாம்.


தில்லாலங்கடி – என் பார்வையில்…


சன் டிவி தயாரித்து , நம்ம இளைய தளபதி தொடங்கி வச்சாருன்னு தெரிஞ்சும் “தில்லாலங்கடி” படத்த போய் பார்த்தது என் தப்புதான். நம்ம சனீஸ்வரன் இரட்டை வேடத்துல ( சன் & இளைய தளபதி) போய் அந்த படத்துக்கு அவரால முடிஞ்சத எல்லாம் பண்ணியிருக்கிறார். என்ன நடக்குதுன்னே தெரியல…
 
கதை :
தனக்கு அல்லது தன்னைச் சுற்றி நடக்கும் எல்லாவற்றிலும் ஒரு கிக் வேண்டும் என்று நினைப்பவன் நமது கதாநாயகன் (ஜெயம் ரவி). ஒரு காதல் திருமணத்தில் சந்திக்கும் ரவியும் தமன்னாவும் சில பல செல்லச் சீண்டல்களுக்குப்பின் ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்குகிறார்கள். எதில் மயங்கி ரவியை தமன்னா காதலித்தாரோ, அதுவே அவர்களின் பிரிவினைக்கு காரணியாகிறது.  தமன்னா பின்னர் மலேசியா திரும்புகிறார். சிறிது காலத்துக்குப் பின் தன்னை பெண் பார்க்க வரும் ஷ்யாமிடம் மேற்கண்ட தனது காதல் அனுபவத்தை சொல்கிறார். ஷாமும் தான் ஒரு திருடனை பற்றியும் தான் அவனை பிடிக்கத்தான் மலேசியா வந்திருப்பதாக சொல்கிறார். நாம் நினைத்தது போலவே இருவரும் ரவியை பற்றித்தான் பேசுகிறார்கள்.
பலப்பல திருப்பங்களுக்கு (என்ன என்ன என்பதை வெள்ளித்திரையில் காண்க) பின்னர் இருவரும் தாம் தேடி வந்தவரை கண்டுபிடிக்கிறார்கள். தமன்னா ரவியுடன் இணைந்தாரா?, ஷாம் திருடனை என்ன செய்தார்? மற்றும் ரவி ஏன் திருடன் ஆனான்? என்பதை வெள்ளித்திரையில் கண்டு தெரிந்து கொள்ளுங்கள்.

நன்று:
  1. ரவியின் புதிய பரிமாணம். அவருக்கு நன்றாக காமெடி வருகிறது. வடிவேலுக்கு சரிநிகர் சமானமாக ஈடு கொடுக்கிறார். ரஜினி மற்றும் விஜயை தொடர்ந்து ரவியும் “கதானாயகக் காமெடியனாக” ஆகலாம்.
  2. சந்தானம் வரும் நேரம் எல்லாம் சிரிப்பு மழை. முக்கியமாக அவர் “Brain Scan report” ஐ வஞ்சிரம் மீன் வருவலுக்கு ஒப்பிடுவது ஒரு சிறந்த உதாரணம்.
  3. நம்ம வடிவேலு. சில இடங்களில் அவர் செய்வது வக்கிரமாக இருந்தாலும் மனிதர் கலக்கோ கலக்கென்று கலக்குகிறார். உங்கள் பயணம் தொடரட்டும்.
  4. யுவனின் இசை.
  5. ஷாமின் வித்தியாசமான வேடம். அவருக்கு இந்த மாதிரி வேடம் நன்றாக பொருந்துகிறது என்றே சொல்லலாம்.
நன்றல்லது:
  1. கதாநாயகன் திருடனாக மாறுவதற்கு இயக்குனர் தரும் காரணம் வலுவுள்ளதாக இல்லை.
  2. கொலை வெறியுடன் தேடி வந்த திருடனால் ஒரே காட்சியில் ஷாம் அவனை  மன்னித்து விடுவதற்கும் வலுவான காரணம் இல்லை. என்னதான் அவன் நல்ல காரியத்திற்காக திருடுகிறான் என்று தெரிந்ததும் அவனை விட்டு விடுவது மிகைப்படுத்தப்பட்ட சினிமாத்தனம்.
  3. லாஜிக் மீறல் : எல்லா இடத்திலும் திருடிக்கொண்டிருந்த கதாநாயகன் திடீரென்று ஐபிஎஸ் அதிகாரியாக வந்து நிற்பது. முன் பாதியில் கதாநாயகனை மிகுந்த படிப்பாளியாக காண்பிப்பதை ஏற்றுக்கொண்டாலும், ஐபிஎஸ் தேர்வு முடித்த பின்னர் இரண்டு வருடம் training எடுக்காமல் திடீரென அதிகாரியாக வந்து நிற்பதும் ஏற்றுகொள்ள முடியவில்லை.
  4. லாஜிக் மீறல் : சின்ன வண்டியை வைத்துக்கொண்டு பெரிய கட்டடத்தை இடித்து உள்ளே சென்று களவாடுவதை நம்பவே முடியவில்லை.
  5. அரசியல்வாதிகளை மிகுந்த முட்டாள்களாக காட்டுவதையும் ஏற்றுகொள்ள முடியவில்லை. நம்மை முட்டாள்கள் ஆக்கும் அவர்களை அவ்வாறு பார்ப்பது சற்று வித்தியாசமாக இருக்கிறது.
  6. திடீர் திடீரென மாறும் காட்சிகள். எடிட்டிங் கில் சற்று தடுமாறி இருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.
  7. திணிக்கப்பட்ட பாடல்கள்.
  8. பள்ளிக் குழந்தைகள் ஊர்வலம் செல்வது. என்ன காரணம் சொல்லி  பர்மிஷன் வாங்கியிருப்பார்கள்? இதிலும் சினிமாத்தனம்.
  9. முதல் காட்சியில் யோகா செய்யும் தமன்னாவின் உடலை சுற்றி சுற்றி காமிரா சுழல்வது நமக்கு சற்று நெளிவை உண்டாக்குகிறது.
மொத்தத்தில் மேற்கண்ட லாஜிக் ஓட்டைகளை கண்டுகொள்ளாவிட்டால் படம் பார்க்கலாம். சில காட்சிகள் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கக் கூடியதாக இல்லை என்றே சொல்லலாம்.
இதை இயக்கியவர் நம் ராஜா என்றால் நம்புவதற்கு சற்று  கடினமாக உள்ளது. அவர் முன்னர் எடுத்த திரைப்படங்களை ஒப்பிட்டு பார்க்காமல் இருக்க முடியவில்லை. எங்களை ஏமாற்றி விட்டீர்கள் ராஜா.

காமன்வெல்த் போட்டிகளும் சில புலம்பல்களும்….

கிராமங்களில் ஒரு சொலவடை உண்டு…
 
“குடிக்க கூழு இல்லை, கு***கு எதுக்குப்பா மல்லிகைப் பூவு”

மேலே சொன்ன சொலவடைக்கும் நாம் காமன்வெல்த் போட்டி நடத்துவதற்கும் எந்த ஒரு வேறுபாடும் கிடையாது.

பத்து நாள் கூத்துக்கு கிட்டத்தட்ட ருபாய்  60,000 கோடிக்கு மேல் செலவு செய்வதாக பல்வேறு முழு நேர செய்தி அலைவரிசைகள் சென்ற வாரம் முழுவதும் கூவி வந்துள்ளன.

யாருக்காக இவை அனைத்தும்?

இந்த போட்டிகள் நடத்துவதால் நமக்கோ அல்லது நம் நாட்டிற்கோ ஏதாவது பயனுண்டா?

சற்றே திரும்பி பார்ப்போமா?

2003 ஆம் ஆண்டு இந்திய ஒலிம்பிக் சங்கம் பிரதமரிடம் வைத்த வேண்டுகோளின் பேரில் அப்போது நமது பிரதமராக இருந்த வாஜ்பாய் அவர்கள் ருபாய் 150 கோடி செலவில் இந்த போட்டிகள் நடத்த ஒப்புதல் அளித்தார் . வேண்டுகோளின் உள்ளடக்கம் என்னவென்றால், ருபாய் 150 கோடி மக்கள் பணத்திலிருந்து கடனாக கொடுக்குமாறும், போட்டிகள் முடிந்த பின்னர் அதனால் வரும் வருமானத்தில் (விளம்பரங்கள், விளம்பரதாரர்கள் மற்றும் நுழைவுக் கட்டணம் வாயிலாக) அதை திருப்பி செலுத்த வேண்டும். அப்போது அளித்த ஒப்புதலில், உள் கட்டமைப்புகளுக்கு (Infrastructure) எந்த விதமான நிதி ஒதுக்கீடும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

இதற்கு அப்பாற்பட்டு ஒவ்வொரு காமன்வெல்த் நாடுகளுக்கும் தத்தம் வீரர்கள் பயிற்சிக்காக தலா ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் தருவதாக வாஜ்பாய் அவர்கள் ஒப்புக்கொண்டார்.

ஆனால் இப்போதோ தொடக்க மற்றும் முடிவு நாட்களுக்கு மட்டுமே ருபாய் 400 கோடி தேவைப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. நமது அரசு மற்றும் அரசியல்வாதிகளின் மெத்தனதினால் இது மேன்மேலும் வளர்ந்து ருபாய் 1,600 கோடி தேவையென கணக்கிடப்பட்டது (பல வருடங்களின் பணவீக்கம் காரணமாக). தற்போது ருபாய் 60,000 கோடி யாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது (அனைத்து செய்தி அலைவரிசைகளின் தகவல் சரி எனும் பட்சத்தில்).

ஆட்சிகள் மாறியும் காட்சிகள் மாறவில்லை. ஒவ்வொரு முறையும் இந்த திட்டங்களின் தேவைக்காக என்ன ஏது என்று கேட்காமலேயே நிதி ஒடுக்கப்பட்டு வந்துள்ளது.

எதற்காக இவை அனைத்தும்…. வறட்டு கவுரவம். நாட்டின் பெருமையை பறைசாற்ற இதைவிட வேறு வழியே இல்லையா என்ன?

4 கோடி ருபாய் செலவு செய்து பயிற்சி எடுத்துக்கொண்ட நமது அபினவ் பிந்த்ரா ஒலிம்பிக் போட்டியில் தங்க பதக்கம் வாங்கவில்லையா? இந்த 60,000 கோடி ரூபாயை நமது விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்காக செலவிட்டு இருந்தால் எவ்வளவோ தங்க பதக்கங்கள் வாங்கியிருக்கலாமே. ஒவ்வொரு கிராமத்திலும் அல்லது மாவட்டத்திலும் வெறும் பெயர்பலகைகளில்  மட்டுமே இயங்கிக்கொண்டிருக்கும் “விளையாட்டு பேரவைகளை (Sports Federation)” மேம்படுத்துவதில் முதலீடு செய்து இருந்தால் இன்று அமெரிக்காவுக்கு நிகராகவோ  அல்லது அதற்கும் மேலாகவோ வெற்றியாளர்கள் நமக்கு கிடைத்து இருக்க மாட்டார்களா?

தற்போது மேல்தட்டு மக்கள் வசித்து வரும் பகுதிகளில் இந்த விளையாட்டின் பேரில் நடைபெற்றுவரும் உள்கட்டமைப்பு மேம்படுத்துதல் பணிகளை அடித்தட்டு மக்கள் வசித்துவரும் பகுதிகளில் செய்தால் அந்த மக்களுக்கும் ஒரு விமோசனம் கிடைக்கும் அல்லவா. பசிக்கு உணவு தருவதும் ருசிக்கு உணவு தருவதும் வேறு வேறு அல்லவா? இதெல்லாம் நமது நாட்டின் வறுமையை மறைக்கவா? நமது நாட்டிற்கு வரும் விளையாட்டு வீரர்கள் மேல் தட்டு மக்களை மட்டுமே  பார்த்துவிட்டு  “இந்தியா எவ்வளவு முன்னேறியிருக்கிறது” என்று மலைப்பார்கள் என்ற எண்ணமோ? சாக்கடையை சுத்தப்படுத்தாமல் மேலே மட்டும் மூடிவிட்டு வாசனைக்காக பன்னீர் தெளிப்பது போல் உள்ளது. என்றாவது ஒரு நாள் உண்மையான காட்சி வெளியே தெரியும் என்று தோன்றவில்லையா?

ஐ.நா சபை ஆண்டுதோறும் வெளியிடும் “UN Development Index” ல் நாம் கடந்த 15 வருடங்களாக தரவரிசை பட்டியலில் 134ஆம் இடத்தையே தக்க வைத்துக் கொண்டிருக்கிறோம்.  இதை மேம்படுத்த ஏதாவது செய்திருக்கலாமே?

இந்த பணத்தில் ஒரு சிறிய பகுதியை போபால் விஷவாயு தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்திற்கு நிதியாக கொடுத்து இருந்தால் அந்த உள்ளங்கள் நம்மை வாழ்த்தியிருக்காதோ?

அதெல்லாம் சரி. இந்த நாட்டு நலனுக்காக இவை அனைத்தையும் நமது மரியாதைக்குரிய அரசியல்வாதிகள் செய்தார்கள் என்றே வைத்துக்கொள்வோம். “செய்வனத் திருந்தச் செய்” என்கின்ற பழமொழிக்கு ஏற்றாற்போல் சரியாக செய்தார்களா என்றால் அதுதான் இல்லை. ஒரு நாள் மழைக்கே ஒழுகிய அரங்கங்கள், பயிற்சியின் பொது, சரியாக பதிக்காத கற்களால் காயமடைந்த வீரர், வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள் தங்குவதற்கு டில்லியில் உள்ள அனைத்து கல்லூரி விடுதிகளில் இருந்து மாணவர்கள் வெளியேற்றம் (வெளியேற்றப்பட்ட  மாணவர்கள் செய்வதறியாது விழித்துக்கொண்டிருந்தது என் கண் முன்னே இன்னமும் நிழலாடுகிறது) என எத்தனை குறைபாடுகள். தெரிந்தது கடுகளவு, தெரியாதது மலையளவு என்றே சொல்லலாம்.

மேலும் இந்த போட்டிகளில் கலந்து கொள்ள இருந்த  மேல்நாட்டு விளையாட்டு வீரர்களான Hoy (Olympic Gold Medalist – Quadrapule), Usain Bolt (Olympic Gold medalist) போன்ற சர்வதேச புகழ் பெற்ற விளையாட்டு வீரர்கள் தாங்கள் இப்போது வர இயலாது என்று தெரிவித்து உள்ளார்கள். இந்த முடிவு விளையாட்டு விளம்பரங்களுக்கு மேலும் பின்னடைவை தந்துள்ளது.

இவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியிலும், இந்த விளையாட்டுகள் நடக்கும் பத்து நாட்களுக்கு ரஷ்யாவிலிருந்து ருபாய் 40 கோடி செலவில் ஒரு பலூன் ஒன்று வாடகைக்கு எடுக்க போகிறார்களாம். என்ன கொடுமை சார் இது. (இந்த பதிவின் தொடக்கத்தில் உள்ள சொலவடையை மீண்டும் ஒருமுறை படித்துக்கொள்ளவும்).

விளையாட்டு வீரர்களுக்கு என பிரத்யேக மேம்பாலங்கள், கொடிகளை வாரி இறைத்து துவக்க நாள் மற்றும் முடிவு நாள் நிகழ்ச்சிகள் (5  கோடிக்கு ஏ.ஆர். ரகுமானிடம் பாடல் ஒன்று இசையமைத்து  தரச் சொன்னதாக கேள்வி) என்று உலகமே மறக்க முடியாத அளவுக்கு நாங்கள் செய்து காட்டுகிறோம் என்று கமிட்டியினர் மார்தட்டிச் சொன்னாலும், இன்னும் பெரிய அளவில் விளம்பரதாரர் கிடைத்தபாடில்லை.அவ்வாறு யாரும் கிடைக்காத பட்சத்தில் இந்த செலவு அனைத்தும் யார் தலையில் விடியும் தெரியுமா? இரவு பகல் பார்க்காமல், வியர்வை வழிய, உடல் வருத்தி நாம் சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை நாட்டு நலனுக்காக வருமான வரி என்ற பெயரில் வருடா வருடம் கட்டுகிறோம் அல்லவா? அதில்தான்…

“மறக்க முடியாத அளவுக்கு” என்று அவர்கள் சொன்னதை “நல்ல நிகழ்வுகளாக ” நினைவில் நிற்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்வோம்.

இப்படி செலவு செய்வதை விட்டுவிட்டு, ஒரு சராசரி இந்திய குழந்தைக்கு உண்ண உணவு, அடிப்படை கல்வி மற்றும் விளையாட்டு பயிற்சிக்கு மைதானமும் நல்ல பயிற்சியாளர்களும் ஏற்படுத்தித் தராத பட்சத்தில் விளையாட்டு உலகத்திலும் “மாவோயிஸ்டுகள்” தோன்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Inception – கனவுலகப் பயணங்கள்

படிக்கும் முன்….
இந்த படத்தை பற்றி நன்கு தெரிந்தவர்கள் பின்வரும் விமர்சனம் படிப்பதோடு நிறுத்திக்கொள்ளவும். படம் யாருக்கெல்லாம் புரியவில்லையோ, அவர்கள் விமர்சனத்தின் கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்திகளையும் படிக்கவும்.

விமர்சனம்
நமது கதானாயகனானவன் (Leonardo DiCaprio) தனது சொந்த நாட்டில் தேடப்பட்டுவரும் ஒரு குற்றவாளி (தன் மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக). அவனுக்கு இரண்டு குழந்தைகள் உண்டு.
அவனிடம் உள்ள ஒரு சிறு கருவியால், இன்னொருவரின் கனவுக்குள் நுழைந்து ஒரு சில எண்ணங்களை விதைத்து, தனக்கோ அல்லது வேறு ஒருவர்க்கு சாதகமாக முடிவெடுக்கச் செய்யமுடியும். இந்த திறமையை பயன்படுத்தி பெரிய மனிதர்களுக்கு உதவி செய்து கொடுத்து பின்னர் அவர்கள் மூலமாக தன் நாட்டிற்குள் நுழைய அவன் திட்டம் தீட்டி இருந்தான்.
அப்படிப்பட்ட ஒருவர் (Ken Watanabe) அவனுக்கு கிடைக்கிறார். அவர் இரும்புத் தொழில் செய்ய விரும்புகிறார். ஆனால் ஏற்கனவே அந்த நாட்டில் மிகவும் புகழ் வாய்ந்த ஒரு நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்தின் தலைவர் இறந்து விடுகிறார். அவரின் மகன் அந்த பொறுப்புக்கு வருவார் என அனைவரும் எதிர்ப்பார்கிறார்கள். அந்த வாரிசின் கனவுக்குள் நுழைந்து அவன் மறுபடியும் அந்த தொழிலை மேற்கொள்ளாதவாறு அவன் மனதை மாற்ற வேண்டும் என்பது கதானாயகனுக்கான வேலை.
அவன் அந்த வேலையை சரியாக செய்தானா? தன் நாட்டிற்கு திரும்பிச் சென்றானா? தன் குழந்தைகளுடன் மீண்டும் இணைந்தானா என்பதை வெள்ளித்திரையில் கண்டு தெரிந்து கொள்ளுங்கள்.
1999ல் வெளிவந்த Matrix திரைப்படம் போல் இதிலும் அசத்தலான சண்டை காட்சிகள் அமைந்துள்ளன.

நன்று:
  1. புவிஈர்ப்பை மிஞ்சும் சண்டை காட்சிகள்
  2. அனைத்து கதாபாத்திரங்களின் தன்மையையும் தாம் செய்யும் வேலைகளையும் அவர்கள் மற்றொருவருடன் உரையாடும்போதே நமக்கு புரிய வைத்திருப்பது.
  3. கணினித் தொகுப்புக் காட்சிகள் (Computer Graphics)
  4. அனைவரின் நடிப்பு
  5. சாத்தியமில்லாத அனைத்தையும் நாம் நம்பும்படியாக காண்பித்திருப்பது
  6. கதாபாத்திரங்களின் மனோபாவத்திற்கேற்ப அவர்களின் செய்யும் வேலையும் அமைந்திருப்பது.
நன்றல்லது :
  1. Ken Watanabe – அவரின் ஆங்கில உரையாடலில் ஜப்பானிய மொழியின் ஆதிக்கம் சற்று அதிகமாக உள்ளதால் நம்மால் அவர் பேசுவதை சரியாக தொடர முடியவில்லை.
  2. பனிச்சறுக்கு சண்டை காட்சிகள் – எடிட்டிங்கில் சற்று தடுமாறி இருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.
தவிர்க்காமல் குடும்பத்துடன் பார்க்கவேண்டிய ஒரு திரைப்படம்.

மொத்தத்தில் இதனால் நம் “சூப்பர் ஹீரோக்களுக்கு” தெரிவிப்பது என்னவென்றால்…..
  1. பைக் அல்லது கார் ஒட்டிக்கொண்டே கண்டம் விட்டு கண்டம் தாவுவது.
  2. ஒரு சிறு கத்தியால் வானூர்தியை அறுப்பது
  3. ஒரே ஆளாக ஐம்பது / அறுபது பேரை அடித்து சாய்ப்பது
  4. அருவாளை தூக்கிகொண்டு ஊர் ஊராக கொலை வெறியுடன் அலைவது
  5. கதாநாயகியின் தொப்புளில் ஆபரேஷன் தவிர மற்ற அனைத்தையும் செய்வது
  6. காதலுக்காக கண்டதையும் வெட்டிக்கொல்வது
  7. ஒரே பாடலில் பணக்காரனாவது
மேற்கண்ட அனைத்தையும் விட்டுவிட்டு, இந்த திரைப்படம் போன்று நல்லதொரு படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும்.

படத்தை பார்த்தும் புரியாதவர்களுக்காக……
மற்ற திரைப்படங்களை போலல்லாமல் இத்திரைப்படத்தை பார்ப்பதற்கு ஒருமுகத்தன்மை மிகவும் அத்தியாவசியமாகிறது. உங்களின் ஒரு சிறு கவனச்சிதைவு உங்களை இந்த திரைப்படத்தை ரசிக்க முடியாமல் செய்துவிடும்.
நினைவில் கொள்ளவேண்டிய சில தகவல்கள்…..
நமது கதாநாயகன் ஒரு பிரித்தேடுப்பாளர் (Extractor).
அவரின் வேலை? – ஒரு அடையாளம் காணப்பட்ட மனிதனை (Target)  தன்னை பணியமர்த்தியவரின் (Client) தேவைக்கேற்ப முடிவெடுக்க வைப்பது.
எவ்வாறு ? – தனது நண்பர்கள் மற்றும் ஒரு சிறு கருவியின் உதவியுடன் அந்த மனிதனின் கனவில் ஒரு எண்ணத்தை விதைத்து, அந்த மனிதனை தனக்கு சாதகமாக முடிவெடுக்க வைத்து , பின்னர் அவ்வாறு செயல்பட வைப்பது.
எப்படி சாத்தியம்? – இலக்கானவர் (target), பணியமர்த்தியவர் (Client) மற்றும் கீழ்கண்ட அனைவரும் அந்த கருவியின் மூலமாக கனவில் இணைந்து, திட்டமிட்டபடி செயல்பட்டு மனதை மாற்றுகிறார்கள்.
சிற்பி அல்லது கட்டிடக்கலைஞர் (Architect – Ellen Page) – கனவு நடைபெறும் இடங்களை வடிவமைப்பது.
மருந்தாளுநர் (Chemist – ) – தூக்க மருந்து தயாரிப்பவர். தேவைப்படும் கால அளவிற்கேற்ப மருந்தின் அளவு இவரால் நிர்ணயிக்கப்படும்.
ஆள்மாராட்டக்காரர் (Forger – Tom Hardy) – தேவைக்கேற்ப மற்றொருவரைப்போல் உருவம் மாறும் தன்மையுடையவர் (இது கனவில் மட்டும்).
நினைவில் இருக்கவேண்டிய சில விஷயங்கள்…
  1. Totem – இது ஒருவர் தாம் கனவுலகில் இருக்கிறோமா இல்லையா என்பதை தெரிந்துகொள்ள உதவும் ஒரு சிறிய பொருள். சுற்றுதல் தன்மையுடைய எந்த ஒரு பொருளாகவும் அது இருக்கலாம். அதனை சுற்றிவிட்டபின் சில மணித்துளிகள் கழித்து அது நின்றுவிட்டால், தாம் கனவுலகில் இல்லை என்று தெரிந்து கொள்ளலாம். இதனை நம் கதாநாயகன் வெவ்வேறு இடங்களில் பயன்படுத்துவதை காணலாம்.
  2. Kick – ஒருவரை ஆழ்ந்த நித்திரையில் இருந்து எழுப்புவதற்காக. உதாரணமாக, ஒருவர் தூங்கிக்கொண்டிருக்கும்போது திடீரென கீழே விழ நேர்ந்தால், அவர் தூக்கம் கலைந்து எழுந்து விடுவார். இதனை அவர்கள் அந்த படத்தில் ஒரு காட்சியில் செயல்முறை விளக்கமாக செய்து காட்டுவார்கள். மேலும், அவர்கள் கனவில் செல்லும் வாகனம் கீழே விழும்போது அனைவரின் கனவும் கலைவதும் இதனால்தான்.
  3. ஒருவர் கனவில் இறக்க நேர்ந்தால் அவரது உறக்கம் உடனே தடைப்பட்டுவிடும்.
  4. Limbo – ஒருவர் தன் கனவில் மிகவும் ஆழமாக செல்ல நேர்ந்தால் வரக்கூடியது. இது ஒரு ஆழ்நிலை உறக்கம் என்றும் சொல்லலாம்.
  5. சிற்பியானவர் உலகில் ஏற்கனவே உள்ளவைகளை கொண்டு கனவுலகை வடிவமைத்தால், அவருக்கும் மற்றவர்களுக்கும் தாம் கனவில் இருக்கிறோமா அல்லது நனவில் இருக்கிறோமா என்று வித்தியாசம் காண இயலாது.
  6. ஒருவர் மற்றொருவரின் கனவுக்குள் நுழைந்தால், அவர்களுக்கு அந்த கனவில் உள்ள மற்றவர்களால் தீங்கு நேரக்கூடும்.
இவை அனைத்தும் படம் தொடங்கி முதல் ஐம்பது நிமிடங்களில் நமக்கு இயக்குநரால் சொல்லப்பட்டு விடுகிறது....

நான் ஏன் இங்கு எழுத வந்தேன்?

எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் 
மெய்ப்பொருள் காண்பது அறிவு

நான் கண்டதில் / கேட்டதில் / படித்ததில் “நான் கண்ட மெய்ப்பொருளை” மக்களுக்கு எடுத்து சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்கின்ற அவாவினால் இவைகளை எழுத தொடங்கினேன்.
முழுக்க முழுக்க பிற மொழி கலப்பில்லாமல்,தமிழை மட்டுமே பயன்படுத்த இயன்ற அளவு முயற்சி எடுத்துள்ளேன். ஒரு சில வார்த்தைகள் என்னை மீறி பிற மொழிகளில் வந்திருந்தால் என்னை மன்னித்து, அந்த வார்த்தைகளுக்கு ஈடான தமிழ்கூறு என்ன என்று எனக்கு தெரியப்படுத்தினால் நானும் தெரிந்துகொண்டு திருத்திக்கொள்வேன். அப்படி ஒரு ஈடான தமிழ்கூறு இல்லாத பட்சத்தில், நாமே கலந்து ஆலோசித்து புதிய கூறு ஒன்றை உருவாக்கி அதனை அனைவரும் பயன்படுத்த வழிவகை செய்யலாம்.
என் பதிப்புகள் யாரையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டவை அல்ல. இவை அனைத்தும் எனது உள்மன குமுறல்களின் வெளிப்பாடு தானே தவிர வேறு ஒன்றும் இல்லை.
கேள்விகள், பாராட்டுக்கள் மற்றும் குற்றங்களை தெரிவிக்க வேண்டிய முகவரி “mokkachaami@gmail.com”. தவறுகள் உடனே திருத்திக்கொள்ளப்படும்.
வாழ்ந்தோம் மடிந்தோம் என்று இல்லாமல் என் எண்ணங்களை மக்கள் அரங்கத்தில் கொண்டு சென்று என்னால் முடிந்ததை மக்களுக்கு கொண்டு சேர்க்க தூண்டிய, என்னை பாதித்த பாரதியின் பாடல் வரிகள்…
 
"தேடிச் சோறு நிதந்தின்று-பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம்
வாடித் துன்பமிக உழன்று-பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து- நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல
வேடிக்கை மனிதரைப் போலே-நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?"
 
என்றும் நன்றியுடன்….
ராஜேஷ் கிருஷ்ணமூர்த்தி