கிராமங்களில் ஒரு சொலவடை உண்டு…
“குடிக்க கூழு இல்லை, கு***கு எதுக்குப்பா மல்லிகைப் பூவு”
மேலே சொன்ன சொலவடைக்கும் நாம் காமன்வெல்த் போட்டி நடத்துவதற்கும் எந்த ஒரு வேறுபாடும் கிடையாது.
பத்து நாள் கூத்துக்கு கிட்டத்தட்ட ருபாய் 60,000 கோடிக்கு மேல் செலவு செய்வதாக பல்வேறு முழு நேர செய்தி அலைவரிசைகள் சென்ற வாரம் முழுவதும் கூவி வந்துள்ளன.
யாருக்காக இவை அனைத்தும்?
இந்த போட்டிகள் நடத்துவதால் நமக்கோ அல்லது நம் நாட்டிற்கோ ஏதாவது பயனுண்டா?
சற்றே திரும்பி பார்ப்போமா?
2003 ஆம் ஆண்டு இந்திய ஒலிம்பிக் சங்கம் பிரதமரிடம் வைத்த வேண்டுகோளின் பேரில் அப்போது நமது பிரதமராக இருந்த வாஜ்பாய் அவர்கள் ருபாய் 150 கோடி செலவில் இந்த போட்டிகள் நடத்த ஒப்புதல் அளித்தார் . வேண்டுகோளின் உள்ளடக்கம் என்னவென்றால், ருபாய் 150 கோடி மக்கள் பணத்திலிருந்து கடனாக கொடுக்குமாறும், போட்டிகள் முடிந்த பின்னர் அதனால் வரும் வருமானத்தில் (விளம்பரங்கள், விளம்பரதாரர்கள் மற்றும் நுழைவுக் கட்டணம் வாயிலாக) அதை திருப்பி செலுத்த வேண்டும். அப்போது அளித்த ஒப்புதலில், உள் கட்டமைப்புகளுக்கு (Infrastructure) எந்த விதமான நிதி ஒதுக்கீடும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
இதற்கு அப்பாற்பட்டு ஒவ்வொரு காமன்வெல்த் நாடுகளுக்கும் தத்தம் வீரர்கள் பயிற்சிக்காக தலா ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் தருவதாக வாஜ்பாய் அவர்கள் ஒப்புக்கொண்டார்.
ஆனால் இப்போதோ தொடக்க மற்றும் முடிவு நாட்களுக்கு மட்டுமே ருபாய் 400 கோடி தேவைப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. நமது அரசு மற்றும் அரசியல்வாதிகளின் மெத்தனதினால் இது மேன்மேலும் வளர்ந்து ருபாய் 1,600 கோடி தேவையென கணக்கிடப்பட்டது (பல வருடங்களின் பணவீக்கம் காரணமாக). தற்போது ருபாய் 60,000 கோடி யாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது (அனைத்து செய்தி அலைவரிசைகளின் தகவல் சரி எனும் பட்சத்தில்).
ஆட்சிகள் மாறியும் காட்சிகள் மாறவில்லை. ஒவ்வொரு முறையும் இந்த திட்டங்களின் தேவைக்காக என்ன ஏது என்று கேட்காமலேயே நிதி ஒடுக்கப்பட்டு வந்துள்ளது.
எதற்காக இவை அனைத்தும்…. வறட்டு கவுரவம். நாட்டின் பெருமையை பறைசாற்ற இதைவிட வேறு வழியே இல்லையா என்ன?
4 கோடி ருபாய் செலவு செய்து பயிற்சி எடுத்துக்கொண்ட நமது அபினவ் பிந்த்ரா ஒலிம்பிக் போட்டியில் தங்க பதக்கம் வாங்கவில்லையா? இந்த 60,000 கோடி ரூபாயை நமது விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்காக செலவிட்டு இருந்தால் எவ்வளவோ தங்க பதக்கங்கள் வாங்கியிருக்கலாமே. ஒவ்வொரு கிராமத்திலும் அல்லது மாவட்டத்திலும் வெறும் பெயர்பலகைகளில் மட்டுமே இயங்கிக்கொண்டிருக்கும் “விளையாட்டு பேரவைகளை (Sports Federation)” மேம்படுத்துவதில் முதலீடு செய்து இருந்தால் இன்று அமெரிக்காவுக்கு நிகராகவோ அல்லது அதற்கும் மேலாகவோ வெற்றியாளர்கள் நமக்கு கிடைத்து இருக்க மாட்டார்களா?
தற்போது மேல்தட்டு மக்கள் வசித்து வரும் பகுதிகளில் இந்த விளையாட்டின் பேரில் நடைபெற்றுவரும் உள்கட்டமைப்பு மேம்படுத்துதல் பணிகளை அடித்தட்டு மக்கள் வசித்துவரும் பகுதிகளில் செய்தால் அந்த மக்களுக்கும் ஒரு விமோசனம் கிடைக்கும் அல்லவா. பசிக்கு உணவு தருவதும் ருசிக்கு உணவு தருவதும் வேறு வேறு அல்லவா? இதெல்லாம் நமது நாட்டின் வறுமையை மறைக்கவா? நமது நாட்டிற்கு வரும் விளையாட்டு வீரர்கள் மேல் தட்டு மக்களை மட்டுமே பார்த்துவிட்டு “இந்தியா எவ்வளவு முன்னேறியிருக்கிறது” என்று மலைப்பார்கள் என்ற எண்ணமோ? சாக்கடையை சுத்தப்படுத்தாமல் மேலே மட்டும் மூடிவிட்டு வாசனைக்காக பன்னீர் தெளிப்பது போல் உள்ளது. என்றாவது ஒரு நாள் உண்மையான காட்சி வெளியே தெரியும் என்று தோன்றவில்லையா?
ஐ.நா சபை ஆண்டுதோறும் வெளியிடும் “UN Development Index” ல் நாம் கடந்த 15 வருடங்களாக தரவரிசை பட்டியலில் 134ஆம் இடத்தையே தக்க வைத்துக் கொண்டிருக்கிறோம். இதை மேம்படுத்த ஏதாவது செய்திருக்கலாமே?
இந்த பணத்தில் ஒரு சிறிய பகுதியை போபால் விஷவாயு தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்திற்கு நிதியாக கொடுத்து இருந்தால் அந்த உள்ளங்கள் நம்மை வாழ்த்தியிருக்காதோ?
அதெல்லாம் சரி. இந்த நாட்டு நலனுக்காக இவை அனைத்தையும் நமது மரியாதைக்குரிய அரசியல்வாதிகள் செய்தார்கள் என்றே வைத்துக்கொள்வோம். “செய்வனத் திருந்தச் செய்” என்கின்ற பழமொழிக்கு ஏற்றாற்போல் சரியாக செய்தார்களா என்றால் அதுதான் இல்லை. ஒரு நாள் மழைக்கே ஒழுகிய அரங்கங்கள், பயிற்சியின் பொது, சரியாக பதிக்காத கற்களால் காயமடைந்த வீரர், வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள் தங்குவதற்கு டில்லியில் உள்ள அனைத்து கல்லூரி விடுதிகளில் இருந்து மாணவர்கள் வெளியேற்றம் (வெளியேற்றப்பட்ட மாணவர்கள் செய்வதறியாது விழித்துக்கொண்டிருந்தது என் கண் முன்னே இன்னமும் நிழலாடுகிறது) என எத்தனை குறைபாடுகள். தெரிந்தது கடுகளவு, தெரியாதது மலையளவு என்றே சொல்லலாம்.
மேலும் இந்த போட்டிகளில் கலந்து கொள்ள இருந்த மேல்நாட்டு விளையாட்டு வீரர்களான Hoy (Olympic Gold Medalist – Quadrapule), Usain Bolt (Olympic Gold medalist) போன்ற சர்வதேச புகழ் பெற்ற விளையாட்டு வீரர்கள் தாங்கள் இப்போது வர இயலாது என்று தெரிவித்து உள்ளார்கள். இந்த முடிவு விளையாட்டு விளம்பரங்களுக்கு மேலும் பின்னடைவை தந்துள்ளது.
இவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியிலும், இந்த விளையாட்டுகள் நடக்கும் பத்து நாட்களுக்கு ரஷ்யாவிலிருந்து ருபாய் 40 கோடி செலவில் ஒரு பலூன் ஒன்று வாடகைக்கு எடுக்க போகிறார்களாம். என்ன கொடுமை சார் இது. (இந்த பதிவின் தொடக்கத்தில் உள்ள சொலவடையை மீண்டும் ஒருமுறை படித்துக்கொள்ளவும்).
விளையாட்டு வீரர்களுக்கு என பிரத்யேக மேம்பாலங்கள், கொடிகளை வாரி இறைத்து துவக்க நாள் மற்றும் முடிவு நாள் நிகழ்ச்சிகள் (5 கோடிக்கு ஏ.ஆர். ரகுமானிடம் பாடல் ஒன்று இசையமைத்து தரச் சொன்னதாக கேள்வி) என்று உலகமே மறக்க முடியாத அளவுக்கு நாங்கள் செய்து காட்டுகிறோம் என்று கமிட்டியினர் மார்தட்டிச் சொன்னாலும், இன்னும் பெரிய அளவில் விளம்பரதாரர் கிடைத்தபாடில்லை.அவ்வாறு யாரும் கிடைக்காத பட்சத்தில் இந்த செலவு அனைத்தும் யார் தலையில் விடியும் தெரியுமா? இரவு பகல் பார்க்காமல், வியர்வை வழிய, உடல் வருத்தி நாம் சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை நாட்டு நலனுக்காக வருமான வரி என்ற பெயரில் வருடா வருடம் கட்டுகிறோம் அல்லவா? அதில்தான்…
“மறக்க முடியாத அளவுக்கு” என்று அவர்கள் சொன்னதை “நல்ல நிகழ்வுகளாக ” நினைவில் நிற்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்வோம்.
இப்படி செலவு செய்வதை விட்டுவிட்டு, ஒரு சராசரி இந்திய குழந்தைக்கு உண்ண உணவு, அடிப்படை கல்வி மற்றும் விளையாட்டு பயிற்சிக்கு மைதானமும் நல்ல பயிற்சியாளர்களும் ஏற்படுத்தித் தராத பட்சத்தில் விளையாட்டு உலகத்திலும் “மாவோயிஸ்டுகள்” தோன்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

No comments:
Post a Comment