சன் டிவி தயாரித்து , நம்ம இளைய தளபதி தொடங்கி வச்சாருன்னு தெரிஞ்சும் “தில்லாலங்கடி” படத்த போய் பார்த்தது என் தப்புதான். நம்ம சனீஸ்வரன் இரட்டை வேடத்துல ( சன் & இளைய தளபதி) போய் அந்த படத்துக்கு அவரால முடிஞ்சத எல்லாம் பண்ணியிருக்கிறார். என்ன நடக்குதுன்னே தெரியல…
கதை :
தனக்கு அல்லது தன்னைச் சுற்றி நடக்கும் எல்லாவற்றிலும் ஒரு கிக் வேண்டும் என்று நினைப்பவன் நமது கதாநாயகன் (ஜெயம் ரவி). ஒரு காதல் திருமணத்தில் சந்திக்கும் ரவியும் தமன்னாவும் சில பல செல்லச் சீண்டல்களுக்குப்பின் ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்குகிறார்கள். எதில் மயங்கி ரவியை தமன்னா காதலித்தாரோ, அதுவே அவர்களின் பிரிவினைக்கு காரணியாகிறது. தமன்னா பின்னர் மலேசியா திரும்புகிறார். சிறிது காலத்துக்குப் பின் தன்னை பெண் பார்க்க வரும் ஷ்யாமிடம் மேற்கண்ட தனது காதல் அனுபவத்தை சொல்கிறார். ஷாமும் தான் ஒரு திருடனை பற்றியும் தான் அவனை பிடிக்கத்தான் மலேசியா வந்திருப்பதாக சொல்கிறார். நாம் நினைத்தது போலவே இருவரும் ரவியை பற்றித்தான் பேசுகிறார்கள்.
பலப்பல திருப்பங்களுக்கு (என்ன என்ன என்பதை வெள்ளித்திரையில் காண்க) பின்னர் இருவரும் தாம் தேடி வந்தவரை கண்டுபிடிக்கிறார்கள். தமன்னா ரவியுடன் இணைந்தாரா?, ஷாம் திருடனை என்ன செய்தார்? மற்றும் ரவி ஏன் திருடன் ஆனான்? என்பதை வெள்ளித்திரையில் கண்டு தெரிந்து கொள்ளுங்கள்.
நன்று:
- ரவியின் புதிய பரிமாணம். அவருக்கு நன்றாக காமெடி வருகிறது. வடிவேலுக்கு சரிநிகர் சமானமாக ஈடு கொடுக்கிறார். ரஜினி மற்றும் விஜயை தொடர்ந்து ரவியும் “கதானாயகக் காமெடியனாக” ஆகலாம்.
- சந்தானம் வரும் நேரம் எல்லாம் சிரிப்பு மழை. முக்கியமாக அவர் “Brain Scan report” ஐ வஞ்சிரம் மீன் வருவலுக்கு ஒப்பிடுவது ஒரு சிறந்த உதாரணம்.
- நம்ம வடிவேலு. சில இடங்களில் அவர் செய்வது வக்கிரமாக இருந்தாலும் மனிதர் கலக்கோ கலக்கென்று கலக்குகிறார். உங்கள் பயணம் தொடரட்டும்.
- யுவனின் இசை.
- ஷாமின் வித்தியாசமான வேடம். அவருக்கு இந்த மாதிரி வேடம் நன்றாக பொருந்துகிறது என்றே சொல்லலாம்.
நன்றல்லது:
- கதாநாயகன் திருடனாக மாறுவதற்கு இயக்குனர் தரும் காரணம் வலுவுள்ளதாக இல்லை.
- கொலை வெறியுடன் தேடி வந்த திருடனால் ஒரே காட்சியில் ஷாம் அவனை மன்னித்து விடுவதற்கும் வலுவான காரணம் இல்லை. என்னதான் அவன் நல்ல காரியத்திற்காக திருடுகிறான் என்று தெரிந்ததும் அவனை விட்டு விடுவது மிகைப்படுத்தப்பட்ட சினிமாத்தனம்.
- லாஜிக் மீறல் : எல்லா இடத்திலும் திருடிக்கொண்டிருந்த கதாநாயகன் திடீரென்று ஐபிஎஸ் அதிகாரியாக வந்து நிற்பது. முன் பாதியில் கதாநாயகனை மிகுந்த படிப்பாளியாக காண்பிப்பதை ஏற்றுக்கொண்டாலும், ஐபிஎஸ் தேர்வு முடித்த பின்னர் இரண்டு வருடம் training எடுக்காமல் திடீரென அதிகாரியாக வந்து நிற்பதும் ஏற்றுகொள்ள முடியவில்லை.
- லாஜிக் மீறல் : சின்ன வண்டியை வைத்துக்கொண்டு பெரிய கட்டடத்தை இடித்து உள்ளே சென்று களவாடுவதை நம்பவே முடியவில்லை.
- அரசியல்வாதிகளை மிகுந்த முட்டாள்களாக காட்டுவதையும் ஏற்றுகொள்ள முடியவில்லை. நம்மை முட்டாள்கள் ஆக்கும் அவர்களை அவ்வாறு பார்ப்பது சற்று வித்தியாசமாக இருக்கிறது.
- திடீர் திடீரென மாறும் காட்சிகள். எடிட்டிங் கில் சற்று தடுமாறி இருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.
- திணிக்கப்பட்ட பாடல்கள்.
- பள்ளிக் குழந்தைகள் ஊர்வலம் செல்வது. என்ன காரணம் சொல்லி பர்மிஷன் வாங்கியிருப்பார்கள்? இதிலும் சினிமாத்தனம்.
- முதல் காட்சியில் யோகா செய்யும் தமன்னாவின் உடலை சுற்றி சுற்றி காமிரா சுழல்வது நமக்கு சற்று நெளிவை உண்டாக்குகிறது.
மொத்தத்தில் மேற்கண்ட லாஜிக் ஓட்டைகளை கண்டுகொள்ளாவிட்டால் படம் பார்க்கலாம். சில காட்சிகள் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கக் கூடியதாக இல்லை என்றே சொல்லலாம்.
இதை இயக்கியவர் நம் ராஜா என்றால் நம்புவதற்கு சற்று கடினமாக உள்ளது. அவர் முன்னர் எடுத்த திரைப்படங்களை ஒப்பிட்டு பார்க்காமல் இருக்க முடியவில்லை. எங்களை ஏமாற்றி விட்டீர்கள் ராஜா.

No comments:
Post a Comment