நான்கு வருடங்கள்....
எட்டு கதாபாத்திரங்கள்...
நான்கு காதல்கள்.... அதில் இரண்டு வெற்றிபெற, ஒன்று தோல்வியுற மற்றொன்று விடை தெரியாமல் தொடருகிறது....
பிரகாஷ்ராஜின் டூயட் மூவீஸ் பிரசவித்த மற்றுமொரு நற்படைப்பு. வாழ்த்துக்கள் பிரகாஷ்ராஜ்... மீண்டும் ஒருமுறை....
கதைச்சுருக்கம்:
சித்து (ஆதித்), டைசன் (நாராயணன்), விமல் (விமல்), சங்கர் (ஷ்ரவன்), மது (ரேஷ்மி), சங்கீதா (ஜியா உமர்), அப்பு (பெனாஸ்), ஷ்ரவந்தி (சோனியா) மற்றும் சரண் ஆகியோர்கல்லூரி நண்பர்கள். அவர்களுக்குள் நான்கு வருடங்களில் நடக்கும் காதல், மோதல், நட்பு, தியாகம் இவைகளின் கலவை தான் இந்த திரைப்படம்.
யார் யாருக்கு ஜோடி, அவர்கள் அனைவரும் சேர்ந்தார்களா அல்லது பிரிந்தார்களா? என்பதை வழக்கம்போல் வெள்ளித்திரையில் கண்டு களிக்க.
நன்று:
- சோனியா தவிர மற்றவர்கள் அனைவரும் புதுமுகங்கள். நடிப்பை நன்றாக வெளிப்படுத்துகிறார்கள். ஒரு கல்லூரியின் உள்ளே நுழைந்த பிரமிப்பு ஏற்படுகிறது. இதில் கவனிக்கப்படவேண்டிய இருவர்... டைசன் மற்றும் விமல். முன்னவர்க்கு நடிப்பு நன்றாக வருகிறது. பின்னவருக்கு காமெடி நன்றாக வருகிறது. இருவரையும் திரைப்படம் பார்த்த அனைவருக்கும் மிகவும் பிடித்திருக்கிறது. இந்த இருவரில் போட்டியில் வெற்றி பெறுவது டைசன் என்பது அரங்கில் கிடைத்த சான்றிதழ்.
- ஒளிப்பதிவு. மிகவும் அருமை. கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. கே.வி. குகனுக்கு பாராட்டுக்கள். அதில் முக்கியமாக கேரளாவில் உள்ள அழகு அனைத்தையும் அள்ளிக்கொண்டு வந்து நமக்கு சமர்ப்பிக்கிறார்.
- விரசமில்லாத் திரைக்கதை. வழக்கமாக கல்லூரி என்றாலே பலவற்றையும் காண்பிக்கும் இக்காலத்தில், இது ஒரு தைரியமான நன்முயற்சி. (பிரகாஷ்ராஜ் படம் என்றாலே இவை இருக்காது என்பது அனைவரும் அறிந்ததே).
- மது மற்றும் ஷ்ரவந்தி நம் மனதில் நிற்கிறார்கள்.நாம் அன்றாடம் காணும் கதாபாத்திரங்கள் போல் இருப்பது படத்திற்கு கூடுதல் பலம். இந்த இருவரில் வெற்றி பெறுவது ஷ்ரவந்தி. நன்றாக நடிக்கிறார், சிரிக்கிறார், உருகுகிறார். அப்புவாக வரும் பெனாஸ் கவனிக்கப்படவேண்டியவர். கான்டக்ட் லென்ஸ் பற்றி மதுவிடம் விசாரிக்கும் காட்சியில் நம்மையும் கண் கலங்க வைக்கிறார்.
- நேர்த்தியான மற்றும் சினிமாத்தனம் இல்லாத திரைக்கதை அமைப்பு. கதாசிரியர் (வழக்கமான கல்லூரி திரைப்படங்களை போல் அல்லாமல்) நமக்கு எந்த பாடமும் கற்பிக்க முற்படவில்லை என்பதே மிக ஆறுதலான விஷயம். எந்த விதமான திடீர் திருப்பங்கள் ஏதும் இல்லாமல் காலத்தோடு கதை நகர்வது முகவும் ஆறுதல்.
- நண்பர்களுக்குள் தியாகம், நட்பு, கோபம் மற்றும் தத்தம் பெற்றோரிடம் உள்ள பாசம் அனைத்தும் சினிமாத்தனம் இல்லாமல் சொல்லப்பட்டு இருக்கிறது.
- வசனங்கள் - மிகவும் அருமை. அன்றாடம் நாம் பேசுவது போல் உள்ளது. படத்திற்கு மிகவும் உயிரூட்டுகின்றது.
- வழக்கமான கதாநாயகிகள் போலல்லாமல், அனைவருக்கும் நடிக்க சந்தர்ப்பம் கொடுத்து இருக்கிறார்கள். அவர்களும் அதனை சரிவர பயன்படுத்தி இருக்கிறார்கள்.
- காதலர்கள் தத்தம் காதலை தாங்கள் உணர்ந்துகொள்ளும் இடம் மிகவும் அருமை.
நன்றல்லது:
- கதாநாயகன் சற்றே உயரம் குறைந்த "வினய்" போல் இருக்கிறார். பாத்திரப்படைப்பு நன்றாக இருந்தாலும், ஒரு துள்ளல் அவரிடம் இல்லாதது சற்று அந்நியமாக தோன்றுகிறது.
- ஒரு பாடல் தவிர மற்ற அனைத்தும் மனதில் நிற்க மறுக்கின்றன. தெலுங்கு பாடலில் தமிழ் வரிகள் அழுத்தி திணிக்கப்பட்டது போல் ஒரு அந்நியத்தன்மை தோன்றுகிறது. சில பாடல்கள் கதையின் ஓட்டத்திற்கு அல்லாமல் வந்து போகின்றன.
- காதலர்களுக்குள் வரும் ஊடல் காட்சிகள் "குஷி" திரைப்படத்தை நினைவூட்டுகின்றன.
- "பால்பாண்டி" கதாபாத்திரம், திணிக்கப்பட்ட சினிமாத்தனம். இதே போன்று ஒரு கதாபாத்திரத்தை தெலுங்கு படைப்பில் மிகவும் அழகாக கையாண்டு இருக்கிறார்கள். தமிழில் அதனை தவறவிட்டது, இத்திரைப்படத்திற்கு எதிர்மறை விளைவைத் தருகிறது.
- பின்பாதி சற்று இழுவையாக இருப்பதை தவிர்த்திருக்கலாம்.
தீர்ப்பு:
ஆங்காங்கே சில குறைகள் தென்பட்டாலும்...
நல்ல கதையம்சம், போலித்தனம் இல்லாத உயிரோட்டமான பாத்திரப்படைப்பு, சிறந்த ஒளிப்பதிவு, புதுமுகங்கள் தரும் புத்துணர்வு என்பன போன்ற பல நிறைகளுக்காக குடும்பத்துடன் எத்தனை முறை வேண்டுமானாலும் கண்டு களிக்கலாம்.
கதையை தவிர மற்ற அனைத்தையும் நம்பும் இச் சினிமா உலகில், இன்று வரை துளியும் மாறாமல் நல்ல திரைப்படங்களை தரும் பிரகாஷ்ராஜ் போன்ற தயாரிப்பளர்களை வாழ்த்தி, வரவேற்று ஊக்குவிப்போம்.

No comments:
Post a Comment