Wednesday, October 27, 2010

கலைஞரின் "செய்ய மறந்த கதை"



ஐயா கலைஞர் அவர்களுக்கு,

வணக்கம். 
என்னை உங்களுக்கு தெரியாது. ஆனால் உங்களை எனக்கு நன்றாக தெரியும். 

கடந்த  சில நாட்களாகவே  தாங்கள் தூக்கம், பசி, சந்தோசம் இல்லாமல் அலைவதாக அறிந்தேன். இவை அனைத்தும் உங்களுக்கு பிள்ளைகள் பிறந்தவுடனயே காணாமல் போய்விட்டது என்பது திராவிடர்கள் அனைவருக்கும் நன்றாக தெரிந்த ஒரு விஷயம். நான் அதைப் பற்றி சொல்லவில்லை. தங்கள் அரசியல் வாழ்க்கையை பற்றி சொன்னேன்.

"மடியில் கனமிருந்தால் வழியில் பயமிருக்கும்" என்ற பழமொழிக்கு ஏற்றாற்போல், இப்போது நீங்கள் அலைந்து கொண்டிருக்கிறீர்கள். இப்போது நீங்கள் யோசிப்பது போல் ஐந்து வருடங்களுக்கு முன்னர் யோசித்திருந்தால் (மக்களுக்கு என்ன நன்மைகள் செய்யலாம் என்று...) இந்த அலைச்சல் மற்ற கட்சிகளுக்கு இருந்திருக்கும்.

நீங்கள் ஆட்சி செய்த இந்த ஐந்து வருடங்கள், உங்கள்  வீட்டு பஞ்சாயத்தை பார்பதற்கே சரியாக இருந்தது. எந்த பிள்ளைக்கு என்ன செய்யலாம் என்று மட்டுமே யோசித்தீர்கள். இதனை நீங்களோ அல்லது உங்கள் மக்களோ யாரும் மறுத்து பேச முடியாது. மக்கள் அனைவரும் கண்கூடாக கண்ட ஒரு உண்மை இது. 

அண்ணா தொடங்கிய திராவிட கட்சியானது இப்போது குடும்ப கட்சியாகிப் போனது. கட்சியில் அடிமட்டத்தில் இறங்கி வேலை பார்த்த உண்மையான தொண்டர்கள் அனைவருக்கு கடைசியில் கிடைத்தது என்ன? இலவச தொலைக்காட்சி, இலவச அடுப்பு மற்றும் இலவச வேட்டி சேலை. ஆனால், செல்வச்செழிப்பில் வளர்ந்த தங்கள் குடும்பத்திற்கு கிடைத்ததோ கட்சியின் அனைத்து பதவிகளும். இதில் விதிவிலக்கான  ஸ்டாலின் மட்டுமே உழைத்து, முன்னேறி உயர் பதவிகளுக்கு வந்தார். இதில் யாருக்கும் மாற்று கருது இல்லை என்றே சொல்லலாம்.

தங்கள் குடும்பத்தினர் அனைவரும் கோடிக்கணக்கில் சம்பாதித்து இருக்கிறார்கள். இன்னும் அவர்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்கள்? இருக்கின்ற இந்த செல்வங்கள் போதாதா?

இரவு பகல் பார்க்காமல் வேலை செய்து, வியர்வை சிந்தி சம்பாதித்த பணத்திலிருந்து வரி கட்டி, மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்கே போராடி பெறவேண்டிய சூழ்நிலைக்கு உங்களால் தள்ளப்பட்ட என்னை போன்ற பல்லாயிரக்கணக்கான குடிமகன்களுக்கு நீங்கள் செய்தது என்ன?

என்னது இலவசங்களை வாரி வழங்கினீர்களா?

யாருக்கு ஐயா வேண்டும் இலவசம்? 

ஆங்கிலத்தில் ஒரு பழமொழியின் தமிழாக்கம்....

"பசிக்கின்ற ஒருவனுக்கு மீன் கொடு,
அவனின்  ஒரு வேளைக்கு  பசி தீரும்.
அவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக்கொடு,
அவனுக்கு வாழ்நாள் முழுவதற்கும் பசி தீரும்"

இலவசங்கள், மக்களை சோம்பேறிகளாக ஆக்கியதை தவிர வேறு என்ன செய்தன. நீங்கள் மிகவும் நம்பிய இந்த இலவசங்கள் இப்போது உங்களுக்கே மிகுந்த தலைவலியாக வந்திருப்பதை கவனித்தீர்களா? அதற்கு பதிலாக வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்தியிருந்தால் அனைவருக்கும் நன்மையாய் இருந்திருக்குமே. நாங்களே இவை அனைத்தையும் வாங்கியிருப்போமே.

மேலும் சொந்தமாக எதையும் செய்யாமல், மத்திய அரசின் திட்டங்களை தமிழ்ப்படுத்தி தமிழ்நாட்டில் உலவ விட்டீர்கள் (108, JNURM.. etc). அதுவே வினையாகி விட்டது.

வட மாவட்டங்கள் அனைத்தையும் ஸ்டாலின் வசம், தென் மாவட்டங்கள் அனைத்தும் அழகிரி வசம் என்று பிரித்து கொடுத்து இருக்கிறீர்களே, தமிழ் நாடு என்ன உங்கள் குடும்ப சொத்தா? நீங்கள் சொன்னதுபோல், அரசியலுக்கு நீங்கள் வரும்போது கொண்டு வந்த மஞ்சள் பையை மட்டுமே பிரித்து கொடுக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது. நினைவில் இருக்கட்டும்.


400 கோடிக்கு மேல் செலவு செய்து தாங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்காகவும், உங்களை புகழும் அடிவருடிகளுக்காகவும் நடத்திய தமிழ் செம்மொழி மாநாட்டால் யாருக்கு என்ன பயன். இது வரையில் புதிய தமிழ்ச்சொற்கள் உருவாக ஏதாவது செய்தீர்களா? முத்தமிழ் அறிஞர் என்று உங்களுக்கு பட்டம் சரிதானா?


தொட்டதெற்கெல்லாம் பாராட்டு விழா நடத்தி என்ன பயன்? உங்கள் பணத்திலா நலத்திட்டங்கள் செய்தீர்கள்? அவ்வளவும் எங்கள் பணம் ஐயா. எங்களிடம் பணம் வாங்கி (வரியாக) எங்களுக்கு செய்வதற்கு உங்களுக்கு ஏன் பாராட்டு விழா? கூத்தாடிகளின் பாராட்டு நிலையானது அல்ல. அன்று அம்மையாரை புகழ்ந்ததும் இதே வாய்கள்தான். மக்களைத் தவிர மற்ற அனைவரிடமும் பாராட்டு பெற்று விட்டீர்கள்.


கட்சி  பேதம் பார்க்காமல் உங்கள் கட்சியினரும், குடும்பத்தினரும் இயற்கை வளங்களை சூறையாடி (மணல் கொள்ளை, விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக்கியது என்பது போன்ற பல..) பணம் பண்ணினரே? இதற்கு உங்கள் பதில்? அடுத்த தலைமுறையினருக்கு நாங்கள் என்ன பதில் சொல்வோம்? தமிழ்நாட்டில் மொத்தம் ஆறு கோடி மக்கள் வசிக்கிறார்கள் ஐயா, உங்கள் குடும்பம் மட்டும் அல்ல. 

உங்கள்  ஆட்சி செய்ய மறந்தது பல உள்ளது. ஒரு சில உங்கள் பார்வைக்கு...


  1. பூரண  மதிவிலக்கு மற்றும் புகையிலை பொருட்களை தடை செய்வது
  2. ஏரி, கால்வாய்கள் மற்றும் ஆறுகளில் தூர்வாறுதல்
  3. மரபு சாரா மின்சார உற்பத்தி (சூரிய சக்தி, குப்பைகளில் இருந்து மின்சாரம்)
  4. மரபு சாரா எரிசக்தி (உணவுக்கழிவுகளில் இருந்து சமையல் எரிவாயு)
  5. நோய்வாய்ப் பட்டிருக்கும் போக்குவரத்துத் துறையின் புனரமைப்பு
  6. அனைத்து அரசுப் பள்ளிகளின் சீரமைப்பு
  7. காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல்
  8. பிரேசில் நாட்டில் உள்ளது போல் "food for trash program" மூலம் குப்பைகளை மறு சுழற்சி செய்யலாம்
  9. விவசாய தொழிலின் புனரமைப்பு
  10. சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாடு
  11. அரசு மருத்துவமனைகளை சீரமைத்தல்
  12. வாகன கட்டணங்களை முறைப்படுத்துதல்
  13. அனைத்து கிராமங்களுக்கும் பேருந்து, மின்சார மற்றும் மருத்துவமனை வசதிகள்
பிள்ளைக்காக அரசு கேபிள் தொடங்கியதில் காண்பித்த அவசரத்தை மக்கள் பிரச்சினைகளுக்கும் சற்று காண்பித்திருக்கலாம். மேற்கண்டவற்றுள் சிலவற்றையாவது செய்திருந்தால் இந்நேரம் நீங்கள் நிம்மதியாக இருந்திருக்கலாம். 


என்ன செய்வது. காலம் கடந்த விட்டது. வரலாறு மிக முக்கியம் அமைச்சரே...


மக்களுக்கு:
 
கலைஞர் செய்ய மறந்த கதையை  நீங்கள் மறக்காமல் இருக்க வேண்டும். அதிகபட்சம் தேர்தல் வரும் வரையிலாவது....

Tuesday, October 26, 2010

அடிகளார் குடும்பமும் அரசியலும்....



சென்ற வார ஜூனியர் விகடனில் வந்த ஒரு செய்தி என்னை மிகவும் பாதித்தது.

மேல்மருவத்தூர் அடிகளாரின் மகன் திரு. அன்பழகன் அரசியலில் நுழையப் போவதாக வந்த செய்திதான் அது.
இவர் எதற்காக அரசியலுக்கு வருகிறார்? மக்களுக்கு நன்மை செய்யவா? இல்லை தாங்கள் வசிக்கும் பகுதியின் முன்னேற்றம் கருதியா?

இப்படி  ஏதாவது தவறாக எதிர்பார்த்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. 

சென்ற  மாதங்களில் அடிகளாரின் அரசாங்கத்துக்கு ஆப்பு வைத்தனர் அரசு அதிகாரிகள். இவை, அடிகளாரின் குடும்பத்தை மிகவும் யோசிக்க வைத்தது என்றும், தங்களுக்கு அரசியல் பலம் இருந்தால் இவை அனைத்தையும் சமாளிக்கலாம் என்பதற்காக இந்த அரசியல் பிரவேசம்.

எனக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்தே இந்த மாதிரி சாமியார்களை நான் நம்புவதில்லை. கடவுள் பெயரால் இவர்கள் அடிக்கும் கொட்டங்களை சகிக்க முடிவதில்லை.

மேற்கண்ட எனது நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியது ஒரு நிகழ்ச்சி. இரண்டு மாதங்களுக்கு முன்னர் விழுப்புரம் வந்திருந்தார் அடிகளார். அவரை தரிசிக்க மக்கள் கூட்டம் அலைமோதியது. அப்பொழுது அங்கே சிலர் பணம் வசூல் செய்துகொண்டு இருந்தனர். என்னவென்று கேட்டால், அடிகளாருக்கு பாத பூஜை செய்ய ரூ. 2,500.00, தொட்டு கும்பிட ரூ. 1,000.00, அடிகளார் உங்கள் வீட்டுக்கு வரவேண்டுமென்றால் ரூ. 25,000.00. 

என்ன கொடுமை சார் இது. கடவுள் பக்தர்களுக்கு அருள் பாலிக்க பணம் வசூல் செய்கிறாரா அல்லது அருள் இங்கே விற்பனைக்கு உள்ளதா? அப்போ யாரிடம் பணம் இருக்கின்றதோ அவர்களுக்கு தான் கடவுள் அருள் கிடைக்குமா? அடுத்த வேலைக்கு உணவில்லாமல், தங்கள் கஷ்டம் தீரும் என்ற நம்பிக்கையில் கடவுளை தரிசிக்க வரும் அன்றாடம்காய்ச்சிகளுக்கு என்ன பதில்?  

வருமான வரி அதிகாரிகளின் சோதனையில் கிடைத்தது கொஞ்சமல்ல. ருபாய் 13 கோடிக்கும் மேல் என்கின்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. படுக்கையறையில் மட்டும் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணம் ருபாய் 9 கோடி. இவையெல்லாம் யாருடைய பணம்? இவர்கள் உழைப்பால் வந்த பணமா? இல்லை "கடவுள் அருள்" மற்றும் "கல்வி" யை விற்றதனால் வந்த பணமா? பதிலுக்காக காத்திருக்கிறோம்....

நான் மட்டும் இவ்வாறு சொல்லவில்லை. மருவத்தூர் அருகில் உள்ள "அச்சிறுபாக்கம்" மற்றும் "சோத்துப்பாக்கம்" கிராமங்களில் உள்ள தேநீர் கடைகளில் சிறிது நேரம் அமர்ந்து இருந்தால், இவை அனைத்தும் (அல்லது இதற்கு மேலும்) சொல்கிறார்கள். அங்கே இவர்கள் நடத்துவது ஒரு தனி அரசாங்கம் என்றே சொல்லலாம்.

இதெல்லாம் அவர்களுக்குவந்த சொதனைகளாம். இவ்வாறு இனிமேல் வராமல் இருக்க ஒரு அரசியல் பலம் தேவைப்பட்டதால் இந்த அரசியல் பிரவேச முடிவாம்.


தங்கள் செல்வாக்கை (பணத்தை சொன்னேன் சார்) பயன்படுத்தி இவர்கள் தேர்தலில் ஜெயித்தால், இவர்கள் நல்லவர்களாகி விடுவார்கள், இவர்கள் கொள்ளையடித்த பணம் அனைத்தும் இவர்களுடையதாகி விடும். பின்னர் தங்கள் அரசியல் பலத்தை வைத்து இதற்க்கு மேலும் கொள்ளையடிப்பார்கள்.


ஆனால் நாமோ, "இவங்களெல்லாம் திருந்தவே மாட்டாங்க சார்" என்று சொல்லிக்கொண்டு நம் வேலையை பார்க்க கிளம்பி விடுவோம். வேறு ஏதாவது ஒரு ஊரில் ஒரு சாமியார் முளைப்பார். அவரும் கொள்ளையடிப்பார். 

தாயே ஆதிபராசக்தி (நான் அடிகளாரை சொல்லவில்லை மக்களே)

தெய்வம் நின்று கொள்ளும் என்று சொல்வார்கள். நீ கோவிலில் நின்றுகொண்டுதான் இருக்கிறாயே தவிர, தண்டிக்க மாட்டேன் என்கிறாயே. உன் காலடியில் இதனை அக்கிரமும் நடக்கின்றது. 


முடிவாக மக்களுக்கு ஒரு கேள்வி....


"கடவுள் பெயரால் ஏமாற்று வேலைகளை  நடத்தும் போலிப் பூசாரிகளை நாட்டிலே நடமாட விட்டது யார் குற்றம்? கடவுளின் குற்றமா? அல்லது கடவுளின் பெயரைச் சொல்லி காலட்சேபம் நடத்தும் கயவர்களின் குற்றமா? 

அல்லது  இவர்களை நல்லவர்கள் என்று நம்பிக்கொண்டு பின்தொடரும் மக்களின் குற்றமா?
 

உதாரணம்  வேண்டுமா? இதோ...

  • பிரேமானந்தா
  • கொலைகார சங்கராச்சாரியார் கும்பல்
  • நித்யானந்தா
நம் Philosophy Prabhakaran சொன்னது போல் ...


என்றைக்கும் சாமியார்களில் இரண்டே வகைதான்... நல்ல சாமியார், போலி சாமியார் என்கிறீர்களா...? இல்லை... சாமியார் என்றாலே போலி தான்... பின்னே என்ன இரண்டு வகை...?
1. போலீசில் மாட்டிய சாமியார்
2. போலீசில் மாட்டாத சாமியார்


சிந்தியுங்கள் மக்களே!!!

Friday, October 22, 2010

மானாட மயிலாட - மனித சர்க்கஸ்


இந்த மாதிரி நிகழ்ச்சிகளை பார்ப்பதை அடியோடு வெறுப்பவன் நான். ஆட்டம் பாட்டம் என்கிற போர்வையில் இவர்கள் அடிக்கும் கூத்து அளவிடமுடியாது. 

நாளாக  நாளாக இந்த மாதிரி நிகழ்ச்சிகள் தாங்கள் என்ன நினைத்து தொடங்கினார்களோ அதனை முழுவதும் மறந்துவிட்டு, மற்ற தொலைக்காட்சிகளுக்கு போட்டியாக, அவர்களை விஞ்ச, வித்தியாசம் என்கின்ற போர்வையில், கண்மூடித்தனமாக போட்டிகளை நடத்துகின்றனர்.


ஒரு நடன நிகழ்ச்சியில் என்ன இருக்கவேண்டும்? நடனம்தானே? ஆனால் நான் பார்த்ததோ வேறு மாதிரி இருந்தது.


கம்பி மீது நடக்கிறார்கள்,
ஒருவரின் உடல் மீது இன்னொருவர் ஏறி நிற்கிறார்,
இருவரும்  சேர்ந்து குட்டிக்கரணம் அடிக்கிறார்கள்,
செங்குத்தான ஒரு சுவரில் உள்ள கம்பிகளில் வளைந்து நெளிந்து ஆடுகிறார்கள்.


பார்கின்ற எனக்கே என்னடா இது என்று இருந்தது.


நான் ஒன்றும் புதுமைகளை வெறுப்பவன் இல்லை. உலக வழக்கப்படி நடனம் என்பது ஒரு மேடையில் மனிதர்கள் மட்டுமே தங்கள் உடலசைவில் செய்வது. ஆனால் இங்கே நடப்பவற்றை காணும்போது, நடன இலக்கணங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு நிகழ்ச்சியை எப்படி நடன நிகழ்ச்சியாக எடுத்துக்கொள்கிறார்கள் என்றே தெரியவில்லை. இதற்கு நடுவர்களாக இரண்டு "நடன இயக்குனர்கள்" வேறு.


போட்டியாளர்கள் தாங்கள் வெற்றி பெற என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.அவர்களை வழிப்படுத்துவது நடுவர்களின் கடமை அல்லவா? அனால் இவர்களோ, வழி தவறுதல்களை பாராட்டி சொல்ல சொல்ல, போட்டியாளர்களும் வழி தவறி செல்கிறார்கள்.


எப்படி  இந்த நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று நான் இவர்களுக்கு சொல்ல வரவில்லை. அவர்களுக்கு இது நன்றாகவே தெரியும் என்று நினைக்கிறேன்.


ஆளுங்கட்சியின்  தொலைகாட்சி என்றதும் என்ன வேண்டுமானாலும் செய்வதா? இவைகளை செய்தால் டி.ஆர்.பீ ரேட்டிங்கில் வேண்டுமானாலும் முன்னேற்றம் வரலாம். உலகம் முழுவதும் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் இப்படிப்பட்ட தவறுகள் நேர்ந்தால், கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்காமல் போய்விடும். சற்று தொலைநோக்கில் சிந்தித்து செயல்பட்டால் நல்ல பலன் கிடைக்கும். செய்வார்களா???


Tuesday, October 5, 2010

தூசி தட்டி எடுக்கப்பட்ட காமராஜர் பெயர்

செய்தி  : 
காமராஜர் நினைவு நாளில், அதிமுகவினர் காமராஜரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். 


இந்த வருடம் திடீரென அதிமுக விற்கு எப்படி காமராஜர் நினைவில் வந்தார் என்பதற்கு  ஒரு கற்பனை உரையாடல்...

-------------
இடம் : கொடநாடு
நாள் : அக்டோபர் 1, 2010

ட்ரிங்.....ட்ரிங்......

காரியதரிசி : ஹலோ,யாரு பேசுறது?

மறுமுனை : நாங்க தலைமை கழகத்திலிருந்து பேசுறோம். அம்மா இருக்காங்களா?

காரியதரிசி : இருக்காங்க. இருங்க கொடுக்கிறேன்.

அம்மா : சொல்லுங்க. என்ன விஷயம்?

மறுமுனை : திமுக, காங்கிரஸ் எல்லோரும் எதேதுக்கோ கூட்டம் கூட்டமா போய் மக்கள் பார்க்கிற மாதிரி ஏதாவது செஞ்சிகிட்டே இருக்காங்க  அம்மா. நாங்க என்ன செய்யுறதுன்னு தெரியல. ஏதாவது சொல்லுங்கம்மா. நாம ஏதாவது செய்யலேன்னா மக்கள் நம்மள மறந்திடுவாங்க.

அம்மா : அமாம், நான் கூட அத பத்திதான் யோசிச்சிகிட்டே இருந்தேன். ஒரு நிமிஷம் இருங்க....ம்ம்ம்.... இப்போ யாருடையதாவது பிறந்த நாளாவது வருதா பாருங்க.

மறுமுனை : ஆமாம்மா. நாளைக்கு தேசத்தந்தை காந்தியின் பிறந்த நாள் வருது. நாம ஏதாவது செஞ்சு கூட்டத்தை கூட்டலாமா அம்மா?

அம்மா : வேணாம். அவரின் பிறந்த நாளை கொண்டாடினால் நமக்கு என்ன லாபம்? அவரை மக்கள் இப்போ நினைக்கிறது வருஷத்துல ரெண்டே நாள் தான். அவரை விட்டுடுங்க. அதெல்லாம் சரிப்படாது. வேற ஏதாவது செய்யலாம்...

மறுமுனை : எங்களுக்கும் எதுவும் தோணலை அம்மா.

அம்மா : இப்படி சொல்ல உங்களுக்கு வெக்கமா இல்லை?

மறுமுனை : என்னம்மா பண்றது. இத்தனை வருஷமா, நீங்க இல்லன்னா சின்னம்மா மட்டும்தான் யோசிச்சீங்க. அதனால சட்டுன்னு மூளை வேலை செய்ய மாட்டேங்குதும்மா. மன்னிச்சிருங்க.
 
அம்மா : சரி. ஒரு நிமிஷம் இருங்க....
(காரியதரிசியை அழைத்து எதோ கேட்கிறார். பின்னர் தொலைபேசியில்.....)

காமராஜரோட நினைவு நாள் நாளைக்கு. அவரோட சமாதிக்கு கூட்டமா போய் மலர் வளையம் வச்சிட்டு வாங்க.

மறுமுனை : யாரும்மா அந்த காமராஜர்?

அம்மா : இந்த காங்கிரஸ்காரங்க சொல்லிக்கிட்டே இருப்பாங்களே, காமராஜர் ஆட்சி!! காமராஜர் ஆட்சின்னு, அதுல வர்றவர் தான். 

மறுமுனை : அவர் அப்படி என்னம்மா செய்தார்? ஒன்னும் தெரியலையே?

அம்மா : அதை பத்தியெல்லாம் நாம  கவலைப்பட வேண்டாம். அவரு என்ன செஞ்சார் எப்படி வாழ்ந்தார் என்பதை பத்தி காங்கிரஸ்காரங்களே கவலைப்படுறதில்லே. நாம எதுக்கு யோசிக்கணும். அவர் வகிச்ச முதலமைச்சர் பதவி மட்டும்  நமக்கு போதும். அவரோட கொள்கைகள் எல்லாம்  நாம நடத்துற அரசியலுக்கு சரிப்பட்டு  வராது. விட்டுடுங்க.

மறுமுனை : கடந்த 35 வருஷமா நாம அப்படி செஞ்சதில்லையே அம்மா. நாம ஆட்சியில இருந்தப்ப கூட அமைச்சர்கள் தான் அவரின் விழாவுக்கு போனாங்க. நீங்க எதுக்கும் போகலியே அம்மா. மக்கள் கோவிச்சிக்க மாட்டாங்களா அம்மா?

அம்மா : (பலத்த சிரிப்பொலி) மக்களை பத்தியெல்லாம் நீங்க எதுக்கு கவலைப்படுறீங்க. மக்களுக்கு அந்த அளவுக்கு ஞாபகசக்தி இருந்திருந்தா நாம யாரும் தேர்தல்ல ஜெயிச்சிருக்கவே முடியாது. தேர்தல்ல ஜெயிக்க அவருடைய பேரை நாம உபயோகப்படுத்தியாக வேண்டும். புரியுதா?

மறுமுனை : புரியுதும்மா. ஆனா அது நமக்கு எப்படி சாதகமாகும்ன்னு தான் புரியல.

அம்மா : சொல்றத நல்ல கவனமா கேளுங்க. அதிமுக கோட்டையா இருந்த தென் மாவட்டங்கள்ள, போன தடவை நடந்த நாடாளுமன்ற தேர்தல்ல நாம ஒரு தொகுதியில கூட ஜெயிக்கல. ஏன்னு சர்வே எடுத்து பாத்தப்ப, நம்ம கட்சி தேவர் கட்சிங்கிற முத்திரை இருக்கு. நாடார்களும் தலித்துகளும் அதிகமா உள்ள தொகுதி அது. 

மறுமுனை  : நாடார்களுக்கு நாம என்னம்மா பண்ணோம்?

அம்மா : வெங்கடேச பண்ணையார நாம தானே வீடு புகுந்து போட்டு தள்ளினோம். அத கருணாநிதி நல்ல பயன்படுத்தி பண்ணையாரின்  மனைவிக்கு (ராதிகா செல்வி)  எம்.பி பதவியை  கொடுத்து அமைச்சராக்கி நாடார் ஒட்டு எல்லாத்தையும் தன் பக்கம் இழுத்துக்கிட்டாரு.

ஆனா இப்போ, சட்டம் ஒழுங்கு பிரச்னையில வியாபாரிங்க எல்லோரும் ஆளுங்கட்சி மேல ரொம்ப அதிருப்தியா இருக்காங்க. இந்த சமயத்தில் நாடாரான காமராஜரின் பேரை உபயோகப்படுத்தினோம்னு வைங்க, நல்லா கல்லா கட்டலாம். புரியுதா?

மறுமுனை : நல்லா புரியுது அம்மா. நீங்க சொன்னபடியே செஞ்சிடுறோம். 

அம்மா : ஒரு வேகத்துல போய் யாருக்கும் பேட்டி குடுத்துராதீங்க. காமராஜரை பத்தி கேட்டாங்கன்ன மாட்டிக்குவீங்க. புரியுதா?

மறுமுனை : சரிம்மா. நீங்க சொன்ன மாதிரியே செய்யுறோம். 
(கோஷம் : அம்மா வாழ்க!!!!)

Sunday, October 3, 2010

எந்திரன் - திரை விமர்சனம்

முன்னதாக, எனக்கு இந்த திரைப்படத்தை காண வாய்ப்பு  ஏற்படுத்திக்கொடுத்த  தம்பி திரு. தினேஷ் பாபு அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.



விமர்சனம்:

தமிழ் திரை உலகில் ஒரு மிகப்பெரிய சாதனை....

நன்றி சொல்லப்பட வேண்டியவர்கள்
  1. அமரர் திரு சுஜாதா அவர்கள் - நீங்கள் இல்லையென்றால் இப்படிப்பட்ட ஒரு திரைக் காவியத்தை நாங்கள் நினைத்துக்கூட பார்த்திருக்க முடியாது. எந்த ஒரு அறிவியல் சித்தாந்தத்தையும் எல்லா மக்களுக்கும் புரிகிற வகையில் உங்களை தவிர வேறு யாராலும் கொடுக்க முடியாது. அதனை இந்த படத்தில் உலகிற்கு நிரூபித்து இருக்கிறீர்கள். உங்கள் தீர்க்க தரிசனம் என்றுமே பொய்த்ததில்லை. அதற்கு இதுவும் ஒரு சான்று.
  2. இயக்குனர் சங்கர் - நீங்கள் மிகவும் செலவு செய்கிறீர்கள் என்று நான் இன்று வரை நினைத்ததுண்டு. ஆனால் இப்படிப்பட்ட ஒரு கதைக்கு, நீங்கள் நினைத்த உரு வரவேண்டும் என்பதற்காக மெனக்கேட்டது நன்றாக தெரிகிறது. மேலாண்மையின் கோட்பாடுக்கேர்ப்ப சரியான கலைஞர்களை தேர்வு செய்தது உங்களுக்கு கை வந்த கலை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டியிருக்கிறீர்கள். சுமார் பத்து வருடங்களாக இக்கருவை சுமந்து பிரசவித்த உங்கள் வேதனை எனக்கு புரிகிறது. நீங்கள் காத்திருந்தது வீண் போகவில்லை. நீங்கள் நினைத்ததற்கு மேலாக நன்றாகவே வந்திருக்கிறது. 
கதை: 
நல்ல காரியத்திற்காக உருவாக்கப்பட்ட, மனிதனின் உணர்வுகள் ஊட்டப்பட்ட  ஒரு எந்திர மனிதன், தீயவர்களின் உதவியோடு பாதை தவறி சென்றால் ஏற்படும் விளைவுகள் தான் இந்த திரைப்படம்.

நன்று:
  1. அமரர் சுஜாதாவின் வசனங்கள். அவ்வளவு அருமை. எந்திரனின் பேச்சாகட்டும், அறிவியலை நமக்கு புரிய வைப்பதாகட்டும், அவருக்கு நிகர் அவரேதான். (பெரும்பாலான வசனங்கள் அவரின் "என் இனிய இயந்திரா" மற்றும் "மீண்டும் ஜீனோ" நாவல்களில் இருந்து வந்துள்ளது)
  2. ரஜினி - அளவான நடிப்பு. தேவையான இடத்தில் நடிக்கிறார். வசன உச்சரிப்பில் கொஞ்சம் தடுமாறினாலும், மற்ற இடங்களில் சமன் படுத்தி விடுகிறார். ஆனாலும் நம்மை ஏங்க வைத்தது, நம் வில்லன் ரஜினி. தமிழ் திரையுலகம் ஒரு நல்ல வில்லனை இழந்து விட்டது. இந்த படத்தில் அறிமுகப் பாடல், பஞ்ச் வசனங்கள் இல்லாதது நிம்மதி தருகிறது. 
  3. கிராபிக்ஸ் காட்சிகள் - நம்மை இருக்கையின் நுனியில் உட்காரச் செய்கிறது. படம் தொடங்கியதிலிருந்து முடியும் வரை நமக்கு ஆச்சரியம் அகலாமல் பார்த்துக்கொண்டது இயக்குனரின் வெற்றி என்றே சொல்லவேண்டும். தமிழ் திரையுலகில் நாம் பார்த்திராத (அல்லது நினைத்துப் பார்த்திராத) காட்சி அமைப்புகள். 
  4. படத்திற்கு ஏற்ற இசை. ரகுமானின் உழைப்பு இதில் பளிச்சிடுகிறது. இவர் பணி செய்யும் அனைத்து படங்களுக்கும் சமமான உழைப்பை கொடுப்பது அனைவரும் அறிந்ததே.
  5. சாபு சிரில் அவர்களின் களமைப்பு.
  6. ஒளிப்பதிவு - மிகவும் அருமை.
  7. சண்டை  காட்சிகள்.
நன்றல்லது:
  1. நீதிமன்ற காட்சிகள் - நம்பும்படியாக இல்லை.
  2. திணிக்கப்பட்ட பாடல்கள். வழக்கமான ஷங்கரின் திரைப்படங்களில் உள்ளது போல்.
  3. ஒரு சில இடங்களில் லாஜிக் மீறல்கள். உதாரணம் - சிட்டி ஐஸ்வர்யாவை கடத்திக்கொண்டு செல்கையில், நூறு பேர்கள் அந்த காரை நோக்கி சுடும்போதும், ஐஸ்வர்யாவுக்கு ஒன்றும் ஆகாதது.
  4. ஒரு சில இடங்களில் க்ராபிக்ஸ் காட்சிகள் சரியாக இல்லை.
தீர்ப்பு:
இந்திய சினிமாவின் ஒரு மிகப்பெரிய சாதனையை தவறாது கண்டு களியுங்கள். முக்கியமாக சவுண்ட் சிஸ்டம் அருமையாக உள்ள திரையரங்கில் பார்ப்பது மிகவும் சிறந்தது. 

கடைசியாக - அனைத்து விழாக்களிலும் அமரர் சுஜாதாவிற்கு தகுந்த மரியாதை செய்யாத, அவரை மறந்துவிட்ட நன்றிகெட்ட கூட்டத்திற்கு (கலாநிதி மாறன், சங்கர் மற்றும் ரஜினி) எனது கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.